விளையாட்டு

மின்னியல் விளையாட்டுப் போட்டிகள் மூலம் இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள்

18/09/2021 07:49 PM

கோலாலம்பூர், 18 செப்டம்பர் (பெர்னாமா) -- இணையம் இல்லாமல் இன்றைய உலகம் இல்லை. அனைத்து துறைகளும் இணையத்தைச் சார்ந்து இருக்கும் நிலையில், விளையாட்டு துறையும் அதற்கு விதிவிலக்கல்ல.

E- SPORTS எனும் மின்னியல் விளையாட்டுப் போட்டிகள் குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும், இதன் மூலம் அதிகமான வாய்ப்புகளை இந்திய இளைஞர்களுக்கு உருவாக்க முடியும் என்று மலேசிய இந்திய இளைஞர் மன்றம், MIYC நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

கையடக்கத்தில் அனைத்து விவகாரங்களையும் செயல்படுத்த முடியும் என்பதை, இணையத்தளத்தின் அசுர வளர்ச்சி காட்டுக்கிறது.

அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், மின்னியல் விளையாட்டுப் போட்டியிலும், இளைஞர்கள் மிளிர வேண்டும் என்று, MIYC--யின் சுழற் கிண்ண மின்னியல் விளையாட்டுப் போட்டியின் இயக்குநர் குகேந்திரன் சுப்ரமணியம் தெரிவித்திருக்கின்றார்.

''இந்த மின்னியல் விளையாட்டில் பல வேலை வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக, வர்ணனையாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், தொகுப்பாளர் மற்றும் இன்னும் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்த மின்னியல் விளையாட்டு துறையில் அதிகமான இந்தியர்கள் பங்கேற்க வேண்டும்,'' என்று அவர் கூறினார்.

மின்னனியல் விளையாட்டுப் போட்டியில் இந்திய இளைஞர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்காக, MOBILE LEGENDS BANG BANG எனும் போட்டியை, செப்டம்பர் 16-ஆம் தேதி MIYC-யும் அதன் மெலாவாத்தி கிளைவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

மின்னியல் விளையாட்டின் தன்மைகள், செயல்பாடுகள், வாய்ப்புகளை மலேசிய இந்திய இளைஞர்களுக்கு தெளிவுபடுத்துவதும் இப்போட்டியின் நோக்கமாகும் என்றும் குகேந்திரன் கூறினார்.

இயங்கலை வாயிலாக வெவ்வேறு அறைகளில் நடைபெற்ற இந்த மின்னியல் விளையாட்டு போட்டியை, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையில் துணை அமைச்சர்,  செனட்டர் டத்தோஶ்ரீ தி லியான் கேர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

மூன்று நாட்களுக்கு திட்டமிடப்பட்டிருந்த இப்போட்டிக்கான தேர்வுச் சுற்று செப்டம்பர் 11 & 12 ஆகிய தேதிகளில் முடிந்த நிலையில், செப்டம்பர் 16-ஆம் தேதியில் அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றும் நடைபெற்றது.

அதுமட்டுமின்றி, 320 இந்திய இளைஞர்கள் பங்கெடுத்த இந்த மின்னியல் விளையாட்டுப் போட்டியில், வெற்றிப் பெறுபவர்களுக்கு 3,200 ரிங்கிட் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]