மக்களவை உறுப்பினர்களின் நம்பிக்கை தமக்கு இன்னும் இருக்கிறது - பிரதமர்

04/08/2021 04:33 PM

புத்ராஜெயா, 4 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நாட்டின் பிரதமராக தொடர்ந்து நிலைத்திருக்க, பெரும்பான்மை மக்களவை உறுப்பினர்களின் நம்பிக்கை தமக்கு இன்னும் இருப்பதாக டான் ஶ்ரீ முகிடின் யாசின் உறுதியாக கூறியிருக்கின்றார்.

இன்று காலையில், இஸ்தான நெகாராவில் மாட்சிமை தங்கிய மாமன்னர், அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவுடன் நடத்தப்பட்ட சந்திப்பின்போது, அந்த விஷயத்தை தாம் அவரிடம் அறிவித்துவிட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆகவே, கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம், விதிமுறை 43 உட்பிரிவு 4-கின் கீழ், பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனும் விவகாரம் எழுவதற்கான அவசியம் இல்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

இருப்பினும், நாடாளுமன்றத்தில் சட்டபூர்வமாக தமது பிரதமர் பதவியை நிரூபிக்க தாம் தயாராக இருப்பதாகவும் டான் ஶ்ரீ முகிடின் தெரிவித்திருக்கிறார்.

இன்று புத்ராஜெயாவில் இருந்து நேரலையாக ஒளிபரப்பப்பட்ட சிறப்புரையில், பிரதமர் அவ்வாறு கூறினார்.

அம்னோவைச் சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மீதான ஆதரவை மீட்டுக் கொள்வதாக மக்களவைத் தலைவரிடம் கடிதம் வழி அறிவித்திருப்பதை, மாட்சிமை தங்கிய மாமன்னர், செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றின் வழியாக தமக்கு தெரிவித்ததாகவும் முகிடின் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]