அரசியல்

ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கு தகுதியுடையவர்கள் போட்டியிடலாம்

19/05/2021 09:50 PM

கோலாலம்பூர், 19 மே (பெர்னாமா)-- கட்சியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வரும் மே 26-ஆம் தேதி ம.இ.கா தேசியத் தலைவருக்கான வேட்புமனு தாக்கல் நடத்துவதற்கு கட்சி தலைமையகம் முடிவெடுத்துள்ளது என்றாலும், கொவிட்19 தொற்றின் அதிகரிப்பு அதற்கு ஏதுவாக இருக்குமா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.

இந்நிலையில், வேட்புமனு தாக்கலை மட்டும் அன்றை தினத்தில் மிதமான அளவில் நடத்திவிட்டு தேர்தலை வேறொரு நாளுக்கு ஒத்தி வைக்கலாம் என்ற பேச்சுவார்த்தை எழுந்துள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பொதுவாக கட்சியின் கிளைக்கூட்டங்களுக்குப் பிறகு தேசியத் தலைவருக்கான போட்டி நடைபெறும்.

அதன் பொருட்டு இம்முறை மே 26ஆம் தேதி வேட்புமனு தாக்கலும் ஜூன் 12ஆம் தேசியத் தலைவருக்கான தேர்தலும் நடத்த திட்டமிட்டிருந்ததாக விக்னேஸ்வரன் கூறினார்.

டான் ஶ்ரீ ராஜூ தலைமையிலான  இந்த வேட்புமனு தாக்கல் குழுவில், டத்தோ கணேசன், முருகவேல், டத்தோ செல்வம் மூக்கையன், டத்தோ ஶ்ரீ தேவமணி ஆகியோரும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

''இம்மாதம் 26ஆம் தேதி திட்டமிட்டபடி ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கலை நடத்த எண்ணம் கொண்டுள்ளோம். போட்யிடவிருப்பவர்கள் கட்சி தலைமையகத்தில் அதற்கான பாரத்தை பெற்று முழுமையாக பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அப்படி போட்டி இருந்தாலும் இப்போதைய காலகட்டத்தில் பிரச்சாரம் நடத்த முடியாது என்பதால் அதற்கு சற்று கால அவகாசம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது,'' என்று அவர் கூறினார். 

இத்தேர்தலை மிகவும் ஜனநாயக முறையில், நடத்த ம.இ.கா முடிவெடுத்துள்ளது.

தலைவர் பதவிக்கு, தகுதியும் தலைமைத்துவ ஆற்றலும் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று விக்னேஸ்வரன் கூறினார்.

'' ம.இ.கா ஒரு ஜனநாயக கட்சி என்பதால் இக்கட்சியில் தேசிய தலைவராக பொறுப்பேற்க கட்சியைச் சார்ந்த யாருக்கு வேண்டுமானாலும் உரிமை இருக்கிறது. போட்டிகள் இருப்பதுதான் கட்சிக்கு மேலும் வலுவைச் சேர்க்கும். இதுபற்றி என்னிடமோ அல்லது டத்தோ ஶ்ரீ சரவணனிடமோ போட்டியிடவிருப்பவர்கள் கலந்து பேசலாம்,'' என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். 

இதைத் தவிர்த்து குறிப்பிட்ட காலத்திற்குள் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த வேண்டுமெனில் நடப்பு சூழலைக் கருத்தில் கொண்டு இயங்கலை வாயிலாக நடத்துவதற்கும் கட்சி நிர்வாகம் தயாராக இருப்பதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்ற, தமிழ்நாட்டிற்கு 110 சுவாச உதவிக் கருவிகளை வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம்  அவர் இதனைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா