பொது

முன்னாள் தேசிய ஓட்டப்பந்தய வீரர் டத்தோ ஆசீர்வாதம் விக்டர் காலமானார்

11/05/2021 08:57 PM

கோலாலம்பூர், 11 மே (பெர்னாமா) -- 1955-ஆம் ஆண்டு தொடங்கி 1975-ஆம் ஆண்டு வரை, தமது பிறந்த மாநிலமான பேராவை மட்டுமின்றி ஒட்டுமொத்த மலேசியாவையும் பிரதிநிதித்து ஓட்டப் பந்தய போட்டிகளில் கொடிகட்டிப் பறந்த  'தங்கமகன்' டத்தோ ஆசீர்வாதம் விக்டர் முதுமை காரணமாக இன்று தமது 80-வது வயதில் காலமானார்.

60 மற்றும் 70-ஆம் ஆண்டுகளில் தனது மின்னல் வேக ஓட்டத்தால், புகழின் உச்சத்தில் இருந்த அந்த ஓட்ட நாயகனின் கால்கள் ஓய்வு எடுத்துக்கொண்ட போதிலும் பலருக்கும் அவர் முன்னோடியாக இருந்திருக்கின்றார். 

ஈப்போவில் பிறந்த இவர், கடந்த 1960-ஆம் ஆண்டு முதன் முறையாக மலேசியாவைப் பிரதிநிதித்து ஓட்டப் பந்தயப் போட்டியில் கலந்து கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டான 1961ஆம் ஆண்டு ரங்கூன் சீ விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.

அதைத் தொடர்ந்து 1962-ஆம் ஆண்டு பெர்த் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொண்டு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றதை ஆசீர்வாதம் விக்டரின் சகோதரி விர்ஜிட்மேரி ஆசீர்வாதம் நினைவு கூர்ந்தார்.

''சிறுவயதிலிருந்து என் அண்ணனுக்கு விளையாட்டின் மீது அதீத ஆர்வம். 100 வயது வரை  விளையாட்டுத்துறையில் நான் நிலைத்து நிற்பேன் என்று அவர் பலமுறை கூறியுள்ளார். தாம் சொன்னது போலவே இறுதிவரை அவர் மூத்த விளையாட்டாளர் என்று அங்கீகாரத்திலேயே இருந்தார். மலேசியாவில் விளையாட்டுத் துறை செழித்தோங்க அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது, ''என்று அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி, 1965-ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டி,1966-ஆம் ஆண்டு ஜமைக்கா காமன்வெல்த் போட்டி,  1967ஆம் ஆண்டு பாங்காங் சீ விளையாட்டுப் போட்டி,1968-ஆம் ஆண்டு மெக்சிகோ ஒலிம்பிக் போட்டி என்று தமது அபார ஓட்டத்தால், உலகையே வலம் வந்து தங்கங்களை வாரிக் குவித்த பெருமை தமது அண்ணனைச் சாரும் என்று விர்ஜிட்மேரி கண்ணீருடன் கூறினார்.

1975-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓட்டப் போட்டிகளில் சரியாகக் கலந்து கொள்ளாத ஆசிர், 1999-ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற முதல் உலக முதியோர் ஓட்டப் போட்டியின் 400 மீட்டர் பிரிவில் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொண்டு, 52 விநாடிகளில் ஓடி முதல் நிலையை அடைந்து தங்கப் பதக்கத்தை வென்றதாக அவருடைய சமகாலத்து ஓட்டப் பந்தய வீரரும், பேரா மாநில ஓட்டப்பந்தய பயிற்சியாளர் வெ.கிருஷ்ணன் தெரிவித்தார்.

''மலேசியாவில் இவர் மட்டுமே இதுவரை மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகள் பங்கெடுத்து சாதனைப் புரிந்துள்ளார். அதுமட்டுமின்றி தமது ஓய்வு காலத்திலும் அதிகமான மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிகளையும் நுணுக்கங்களையும் இவர் கற்றுக் கொடுத்துள்ளார். இவரிடம் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் மாநில மட்டுமின்றி தேசிய அளவிலும் ஓட்டப்போட்டியில் மிளிந்துள்ளதை மறுக்க முடியாது,'' என்றார் அவர்.

முன்னாள் தேசிய ஓட்டப்பந்தய வீரர் ஆசீர்வாதம் விக்டரின் பல சாதனைகள் இன்றளவும் முறியடிக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர், அன்னாரின் மரணம் நாட்டின் விளையாட்டுத் துறைக்குப் பேரிழப்பு என்றும் கூறினார். 

-- பெர்னாமா