பி.எஸ்.யூ திட்டம்: 1,286 கோடி ரிங்கிட் மதிப்பிலான விண்ணப்பங்களுக்கு அரசாங்கம் ஒப்புதல்

06/05/2021 06:52 PM

புத்ராஜெயா, 06 மே (பெர்னாமா) -- கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி வரையில் பி.எஸ்.யூ எனப்படும் ஊதிய உதவித் திட்டம் 1.0-இன் கீழ் 1,286 கோடி ரிங்கிட் மதிப்பிலான ஊதிய உதவி விண்ணப்பங்களுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்வழி, 322,177 முதலாளிமார்களும் 26 லட்சத்து 40,000 ஊழியர்களும் பயனடைந்துள்ளதாக நிதி அமைச்சர்  தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ரூல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

ஊதிய உதவித் திட்டம் 2.0-இன் கீழ் 117 கோடி ரிங்கிட் மதிப்பிலான ஊதிய உதவி விண்ணப்பங்களுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெங்கு சஃப்ரூல் கூறினார்.

இதன் வழி, 73,567 முதலாளிமார்கள் பயனடைந்ததோடு 635,748 ஊழியர்கள் பணியில் தொடர்ந்து நிலைத்திருக்க முடிந்ததாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, PENJANA திட்டத்தின் கீழ், சுற்றுலாத் துறையின் நிதியுதவிக்கான 644 விண்ணப்பங்களில் ஆறு கோடியே 39 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 321 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி வரை ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி உதவித் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 32,403 பேருக்கு வேலை கிடைத்துள்ளதையும் தெங்கு சஃப்ரூல் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா