சிறப்புச் செய்தி

கணபதி மரணம் : ஐ.பி.சி.எம்.சி ஆணையத்தின் கீழ் நடவடிக்கை தேவை

01/05/2021 07:51 PM

கோலாலம்பூர், 01 மே (பெர்னாமா) -- தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர், வலிகளோடு போராடி மரணம் அடைந்த எ.கணபதியின் நிலமை மனித உரிமை மீறலாகவே கவனிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் அதிகார தரப்பில் இருக்கும் போலீசாரின் அராஜகமான நவடிக்கையாக சித்தரிக்கப்படுவதால், பல கேள்விகள் இதற்கு எதிராக முன் வைக்கப்படுகின்றன.

IPC-MC எனப்படும் போலீஸ் புகார்கள் மற்றும் தவறான நடத்தைக்கான சுயேட்சை ஆணைய சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு சட்ட வழக்கறிஞர் கார்த்திகேசன் சண்முகம் கூறுகின்றார்.

போலீஸ் துறையில் நடக்கக்கூடிய அத்துமீறிய செயல்கள், குறிப்பாக, லஞ்சம், ஊழல், மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றுக்கு எதிராக IPCMC ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் வழியாக அதிகார தரப்பின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று 2004-ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டதாக கார்த்திகேசன் சண்முகம் தெரிவித்தார்.

மாட்சிமை தங்கிய மாமன்னரின் ஆலோசனையின் பேரில் அமைக்கப்பட்ட அந்த அரசு ஆணையம் சட்டமாக்கப்பட, 2019-ஆம் ஆண்டில் ஜூலை 18-ஆம் தேதி, மக்களவையில் முதலாவது முறையாக தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு, இந்த IPCMC சட்ட மசோதாவில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று சில தரப்பு கேட்டுக்கொள்ளப்பட்டதுடன், அதனை மீட்டுக் கொள்ள அரசாங்கம் விண்ணப்பம் செய்து, ஆட்சி மாற்றத்தினால் அதற்கான இலக்கும் நிறைவேறாமலே போனதாகவும் கார்த்திகேசன் குறிப்பிட்டார்.

''மக்களின் புகார்களின் அடிப்படையில், சுயேட்டையாக இயங்கி அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு, பணி நீக்கம் செய்யும் வகையில், இந்த ஆணையம்அதிகாரத்தைக் கொண்டிருப்பதால், இது மீண்சும் அமைக்கப்பட்ட வேண்டும்,'' என்று கார்த்திகேசன் வலியுறுத்தினார்.

தடுப்பு காவல் மரணங்களில் கணபதியின் மரணமே இறுதியாக இருக்க வேண்டும் என்பதோடு, மீண்டும் இந்த, IPCMC சட்டம் அமைக்கப்பட இவரின் மரணமே தொடக்கமாவும் இருக்க வேண்டும் என்றும் கார்த்திகேசன் குறிப்பிட்டார்.

இந்த சட்டம் இயற்றப்படுமானால், அதிகாரத் தரப்பில் இனிமேல் குற்றச் செயல்களும். அத்துமீறிய நடவடிக்கைகளும் நடைபெறாமல் தடுக்க முடியும்,'' என்று கணபதியின் மரணம் தொடர்பில், கார்த்திகேசன் பெர்னாமாவிடம் இந்த தகவல்களை தெரிவித்தார்.

இதனிடையே, போலீஸ் காவலில் இருந்தபோது, மருத்துவமனையில் இறந்த கணபதி தாக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அரிஃபை தராவே தெரிவித்தார்.

போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த போது, அவர் அடிக்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில், விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும், அதன் விசாரணை அறிக்கை அரசு தரப்பு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

-- பெர்னாமா