சிறப்புச் செய்தி

வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் #வாசிப்போம்

08/04/2021 09:58 PM

கோலாலம்பூர், 08 ஏப்ரல் (பெர்னாமா) -- நம்மை ஏமாற்றாத, ஒரு சிறந்த நண்பன் புத்தகம் என்பார்கள். இந்த நண்பனை உயிர் நண்பனாக ஏற்றுக் கொண்டவர்கள், புகழ் உச்சியில் அமர்ந்திருக்கிறார்கள்; பலர் சாதனையாளராகவும் மாறியிருக்கிறார்கள்.

ஆனால், இன்று நம்மிடையே வெகுவாகக் குறைந்து வருகின்ற பழக்கங்களில் ஒன்றாக வாசிப்பு பழக்கம் மாறியிருக்கின்றது.

இதனைக் கருத்தில் கொண்டே, வளரும் தலைமுறையினரிடையே வாசிப்பை விதைக்கும் நோக்கத்தில் பெர்னாமா தமிழ்ச்செய்தி, HASHTAG வாசிப்போம் எனும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

கையில் புத்தகத்துடன் செல்வதைப் பெருமையாக கருதும் காலம் சென்று, இன்று அவற்றைக் கைத்தொலைப்பேசி மற்றும் இதர தொழில்நுட்பங்கள் ஆக்கிரமித்துள்ளன.

அதிலும் குறிப்பாக, இந்த இயங்கலை யுகத்தில் இளைய சமுதாயம் வாசிப்புப் பழக்கத்தை மறந்திருப்பது மிகவும் கவலைக்குறியது.

எனவே, வாசிப்பு பழக்கத்தை வெறுமனே ஒரு பொழுதுபோக்காக மட்டும் நோக்காமல், வாழ்வியலோடு தொடர்புபடுத்தும் ஓர் அம்சமாகவும் பார்க்க வேண்டும் என்று சிலர் பெர்னாமாவிடம் தெரிவித்தனர்.

''வாசிப்புப் பழக்கத்தைச் சிறுவயது முதல் நாம் நம்முடைய இளைய தலைமுறைக்குப் பழக்கப் படுத்தவேண்டும். இந்த வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதில் ஆசிரியர்களும் பெற்றோர்களுமே முக்கியப் பங்காற்ற வேண்டும்,'' என்று சமீ.ஹேமலதா கூறினார்.

நூல்களை கையில் எடுத்தாலே தூக்கம், சோம்பல், ஆர்வமின்மை போன்ற எதிர்மறையான எண்ணங்கள் இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகின்றன.

இந்த சூழல் தொடராமல் இருப்பதற்கும், வாசிப்பற்ற சமூதாயம் உருவாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், இந்த #வாசிப்போம் எனும் நிகழ்ச்சி நல்லதொரு முயற்சி என்று இளைஞர்கள் சிலர் கூறினர்.

''நாம் வாசிப்பதற்கு நாளிதழ், கதைப் புத்தகம், வார மாத இதழ்கள், போன்றவை நிறைய உள்ளன. இதைத் தவிர்த்துக் கணினியின் மூலமாகவும் நாம் வாசிக்கலாம். இணையத்திலிருந்து பல தகவல்களை வாசிப்புத்திறனாலேயே தெரிந்து கொள்கிறோம்,'' என்று புனிதன் பரம்சிவன் கூறினார்.

இதனிடையே, ஒவ்வொரு சனிக்கிழமைகளில் இரவு 7.30 மணியளவில் ஒளியேறும் #வாசிப்போம் எனும் தகவல் நிறைந்த அங்கத்தை கண்டு கழித்து, பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

-- பெர்னாமா