பொது

பி.கே.பி-யை மீறியக் குற்றத்திற்காக 550 பேர் கைது

24/01/2021 06:45 PM

புத்ராஜெயா, 24 ஜனவரி (பெர்னாமா) -- மாவட்டம் மற்றும் மாநிலம் கடந்து பயணம் செய்த குற்றத்திற்காக சனிக்கிழமை 54 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்ட தர விதிமுறை, எஸ்.ஓ.பி-யை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 550 பேரில் இவர்களும் அடங்குவர் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

நேற்று சனிக்கிழமை, கைது செய்யப்பட்ட 550 பேரில் 499 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் வேளையில் 42 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

அதோடு, ஒன்பது பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

அவர்களில், 130 பேர் சுவாசக் கவசம் அணியாத குற்றத்திற்கு கைது செய்யப்பட்டிருக்கும் வேளையில், 112 பேர் சுய விவரக் குறிப்பு உபகரணங்களை ஏற்படுத்திக் கொடுக்காததாலும், 68 பேர் தொடுகை இடைவெளியைப் பின்பற்றாத காரணத்தினாலும், அனுமதியின்றி வழங்கப்பட்ட கால அவகாசத்தைக் காட்டிலும் அதிகமான நேரம் செயல்பட்ட 44 கடை உரிமையாளர்களுக்கும் இதர குற்றங்களுக்காக 142 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, பெந்தோங் சிறைச்சாலையிலும் அதன் ஊழியர் தங்குமிடத்திலும் நாளை 25-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 8-ஆம் தேதி வரையில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பி.கே.பி.டி அமல்படுத்தப்படவிருக்கிறது.

அந்த சிறைச்சாலையிலுள்ள கைதிகள் மத்தியில் கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருப்பதாக டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி கூறினார்.

-- பெர்னாமா