பொது

தைப்பூசத்திற்கான பிரத்தியேக விடுமுறை இவ்வாண்டும் வழங்கப்பட வேண்டும் - சுங்கைப் பட்டாணி தேவஸ்தானம் கோரிக்கை 

21/01/2021 07:58 PM

சுங்கைப் பட்டாணி, 21 ஜனவரி (பெர்னாமா) -- கொவிட்-19 காரணமாக நாடு தழுவிய அளவில், தைப்பூசத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதை, கெடா சுங்கைப்பட்டாணி ஶ்ரீ சுப்ரமணிய தேவஸ்தான நிர்வாகம் ஏற்றுக் கொண்டாலும், ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வந்த பிரத்தியேக விடுமுறை இவ்வாண்டும் வழங்கப்பட வேண்டும் என்று தேவஸ்தானம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

தேவஸ்தானத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள பொது மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், பொது விடுமுறை வழங்கப்படும் பட்சத்தில், அவர்கள் வீட்டில் இருந்தவாறே தைப்பூசத்திற்கான சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என்று தேவஸ்தான தலைவர்  ராஜேந்திரன் பெரியசாமி தெரிவித்தார்.

''கெடா மாநில அரசாங்கம், கடந்த காலங்களில் வழங்கி வந்த பிரத்தியேக விடுமுறையை இந்த ஆண்டும் வழங்குவதற்கு பாஸ் மாநில அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று  தேவஸ்தான நிர்வாகம் வேண்டுகோள் விடுக்கிறது,'' என்று ராஜேந்திரன் தெரிவித்தார். 

அரசாங்கத்தின் ஆணைக்கு ஏற்ப, தேவஸ்தானத்தில் தைப்பூச சிறப்பு வழிபாடுகள், ஒன்று கூடல் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா