சிறப்புச் செய்தி

கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் மாட்டுப் பொங்கல்

16/01/2021 08:01 PM

கோலாலம்பூர், 15 ஜனவரி (பெர்னாமா) --  ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளாக வரும் மாட்டுப் பொங்கல் சிறப்பு வாய்ந்தது. விவசாயத்தில் உழவர்களுக்கு பக்கபலமாக நின்ற, மற்ற உயிரினங்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, கால்நடைகளை வழிபடும் ஒரு நாளாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பண்ணை வைத்திருப்பர்களுக்கு கோமாதா தெய்வம் என்பதால், இந்நாளை சொந்த பந்தங்களோடு, வெகு விமரிசாயக கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருப்பர்கள்.
ஆனால், அந்த சூழ்நிலை இப்போதும் இருக்கின்றதா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. 

உழவனின் உயிர்த் தோழானாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றி நன்றி கூறும் நோக்கோடு பொங்கி, விருந்து படைத்து, நன்றி கடன் செய்யும் போது, அதன் பலன் இன்னும் அதிகமாகும் என்பது நம்பிக்கை.

உயிர் கொடுக்கும் பயிர்களுக்கு மரியாதை செய்வதுடன், அப்பயிரை விளைவிக்க துணை புரியும் பசுக்கள் மற்றும் காளைகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, கழுத்தில் புதிய கயிறுகள் கட்டி, மணிகள் கட்டி, அலங்கரித்து பொங்கலிட்டு படையல் வைத்து வழிபடுவார்கள்.

மலேசியாவை பொருத்தவரையில், மாட்டு பண்ணை வைத்திருப்பவர்கள் சுயத் தொழிலில் கொடிகட்டி பறப்பதுடன், அதன் மூலம் அடுத்து வரும் பரம்பரையை வாழையடி வாழையாக உயர்த்துவதிலும் முன்னோக்கி பயணிப்பவர்கள்.

அவர்களின் பயணமும் கொண்டாட்டமும் இம்முறை பெரிய அளவில் இல்லை என்று சில மாட்டு பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

''ஆண்டுதோறும் மாட்டு பொங்கலை நாங்கள் சிறப்பாகக் கொண்டாடுவோம். ஆனால் இம்முறை உற்றார் உறவினர்களின்றி, குறைந்த பேருடன் கொண்டாடினோம். அக்கம் பக்கத்தார் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் மாடு பொங்கல் கச்சிதமாய் முடிந்தது'', என்று மணிமாறன் சுப்ரமணியன் கூறினார்.

''கோமாதா வழிபாடு என்பது முன்னோர்களின் வழியாக, நாங்கள் கடைபிடித்து வருகின்றோம். இந்த நாளை கொண்டாடுவது மகிழ்ச்சி என்றாலும் நண்பர்களும் உறவினர்களுமின்றி மிதமான அளவிலேயே கொண்டாடினோம்'', என்று பிரவின் குமார் மணிமாறன்  குறிப்பிட்டார். 

உற்றார் உறவினரோடு பெரிய அளவிலான கொண்டாங்கள் என்ற நிலை மாறி, மிகக் கச்சிதமாக, கோமாதாவுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்நாள் கொண்டாடப்பட்டுள்ளது.

அதேவேளையில், கொவிட்19 பெருந்தொற்று தாக்கமும் அதனால் அமலுக்கு வந்த நடமாட்டு கட்டுப்பாடு உத்தரவுகளும் இத்தொழில் செய்வோரையும் பெருமளவில் பாதிப்டையவும் செய்துள்ளது.

''கொவிட்19 காரணத்தால் மாட்டு பாலை முறையாக விற்பனைக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. சில நாட்களில், அதிகமானோர் ஒரே நேரத்தில் பாலை விற்க கொண்டு வரும் போது. அங்கு விற்பனை இல்லாமல் நட்டம் ஏற்பட்டது. பணியாளர்கள் இல்லால் போனதால் மாடுகளை பராமரிக்கும் முடியாமல் போனதால் அனைத்து மாடுகளையும் விற்றுவிட்டேன். மனதுக்கு கஷ்டம் என்றாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை'', என, சுகுமாரன் பெருமாள் வருத்தத்துடன் தெரிவித்தார். 

விவசாயத்திற்குத் துணை நிற்கும் இந்த ஐந்தறிவு ஜீவன்களுக்கு பொங்கலும், பழங்களும் கொடுத்து, தங்கள் அன்பை வெளிப்படுத்தி மரியாதை செலுத்தும் இந்த பண்பு வரவேற்க கூடியாது என்றாலும், இதனைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு காலம் வழி விடாமல் முடக்கி வைத்துள்ளது வேதனை அளிப்பதாகவும் அவர்கள் கூறினர்.

--பெர்னாமா