பொது

பிப்ரவரி மாத இறுதிக்குள் மலேசியாவிற்குத் தடுப்பூசி

14/01/2021 06:39 PM

கோலாலம்பூர், 14 ஜனவரி (பெர்னாமா) -- கொவிட்-19 தடுப்பூசி பெறும் முன்னிலை நாடுகளில் மலேசியா ஒன்றல்ல என்றாலும் அதன் கொள்முதல் காலம் தாழ்த்தி வருதாக அர்த்தமாகாது.

ஆகையால், இவ்வாண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் அத்தடுப்பூசி மலேசியா பெற்று விடும் என்று அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார். 

சில அண்டைகளில் கொவிட் தடுப்பூசி கிடைத்துவிட்ட வேளையில் மலேசியாவிற்கு அது இன்னும் வந்தடையாதது குறித்துச் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.

மலேசியாவைவிட நான்கு மாதங்களுக்கு முன்னதாக இத்தடுப்பூசிக்கு விண்ணப்பித்திருந்த ஜப்பானுக்கு அடுத்த மாத இறுதியில்தான் அது கிடைக்கவிருப்பதைக் கைரி ஜமாலுடின் சுட்டிக் காட்டினார்.

அண்டை நாடுகளான சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவிற்குத் தனிப்பட்ட ரீதியிலான அவசியங்கள் இருக்கும் பட்சத்தில் அவை மலேசியாவிற்கு முன்னதாகக் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றிருக்கலாம் என்று கைரி குறிப்பிட்டார்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையிலிருந்து 20 விழுக்காட்டினர் அதாவது 64 லட்ச மக்களுக்குச் செலுத்தக்கூடிய ஒரு கோடியே 28 லட்சம் தடுப்பூசிகளைப் ஃபைசர்- பையோ என்ட் டெக் நிறுவனத்திடமிருந்து பெறவிருப்பதாக அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.

-- பெர்னாமா