சிறப்புச் செய்தி

அஸ்தி ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்ட நூல்

13/01/2021 08:06 PM

கோலாலம்பூர், 13 ஜனவரி (பெர்னாமா) -- கொவிட்-19 நோயின் தாக்கத்தினால் கடந்த ஆண்டு முழுவதும் மாணவர்கள் தங்களது கல்வியை இயங்கலை வாயிலாகவே பயின்று வந்தனர்.

இயங்கலை வாயிலாக கல்வி கற்பித்தலில் சவால்களை சந்தித்து வந்த மாணவர்களுக்காக அஸ்தி எனப்படும் அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க இயக்கம், அறிவியல் மற்றும் கணித பாடங்களுக்கான பாடத் திட்ட நூலை வெளியிடும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.

பி40 பிரிவு குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த இயங்கலை வாயிலான கல்வியை மேற்கொள்ள சற்று சிரமத்தை எதிர்நோக்கி இருந்தனர்.

கொவிட்-19 நோயினால் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து இப்பாடத் திட்ட நூல்கள் வாயிலாக மாணவர்கள் வீட்டிலிருந்தே அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள அஸ்தி இம்முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த பாடத் திட்ட நூல்கள்களைத் தயார்படுத்தும் விதமாக அஸ்தி உடன் இணைந்து பினாங்கு மாநில தலைமையாசிரியர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி பட்டறையில் பினாங்கு மாநிலத்தை சேர்ந்த 20 அறிவியல் ஆசிரியர்கள் கலந்து கொண்டதாக அதன் தலைவர் குணசேகரன் நல்லதம்பி தெரிவித்தார்.

''நிறைய பி40 மாணவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இந்தப் பாடநூல்கள் நிச்சயம் உதவியாக இருக்கும்,'' என்றார் அவர்.

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்திருந்தாலும் இன்னமும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இயங்கலை வாயிலாக கல்வி கற்பதில் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இப்பாடத் திட்ட நூல்கள் அமையும் என்று பயிற்சி பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் மாறன் சந்திரன் தெளிவுப்படுத்தியிருக்கின்றார்.

''நிபுணத்துவம் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டனர். பாட நூல்கள்களின் தயாரிப்பு வேலைகள் வெற்றிகரமாக நடைபெற்றது,'' என்றார் அவர்.

தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு முடிந்த பிறகு பிப்ரவரி மாதத்தில் அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்த பாடத் திட்ட நூல்கள் சமர்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.

--பெர்னாமா