பொது

ஜோகூர் மாநில மக்களுக்கான உதவிகள் - வித்யாநந்தன் ராமநாதன்

05/01/2021 07:56 PM

ஜோகூர், 05 ஜனவரி (பெர்னாமா) -- அடை மழை காரணமாக நாட்டில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொவிட்-19 காலக்கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநில மக்களுக்கு எம்மாதிரியான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறித்து ஜோகூர் மாநில சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் செயற்குழுத் தலைவர் வித்யாநந்தன் ராமநாதன் பெர்னாமாவிடம் தெரிவித்திருக்கிறார்.

ஜோகூரில் 7 மாவட்டங்களை உட்படுத்தி 5400-க்கும் மேற்பட்ட மக்கள் 52 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வித்யாநந்தன் கூறினார்.

எனினும், பாதிக்கப்பட்ட மக்கள் இந்த மையங்களில் தொடர்ந்து பதிவு செய்து வரும் நிலையில் அங்கு தங்க வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், பெருந்தொற்று காலக்கட்டத்தில் பெரும் வெள்ளத்தை எதிர்கொள்வது அனைத்து தரப்பினருக்கும் கடினமான சவாலாக அமைவதாகவும் வித்யாநந்தன் விவரித்தார்.

அதோடு, நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்திற்காக பள்ளி வகுப்பறைகள் 3-இல் இருந்து 4 பகுதிகளாக மட்டுமே பிரிக்கப்பட்டு குடும்ப வாரியாக மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடுகை இடைவெளியைப் பின்பற்றுவதே அதன் முக்கியம் நோக்கம் என்றும் வித்யாநந்தன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இது போன்ற வெள்ள பேரிடர் ஏற்படும்போது, நிவாரண மையங்களில் தங்கியிருக்கும் மக்கள் ஒன்றிணைந்து உணவுகளைத் தயார் செய்வார்கள். ஆனால், தற்போது அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

அதுமட்டுமின்றி, அனைத்து வெள்ள நிவாரண மையங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதற்கே முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

-- பெர்னாமா