'PENJANA' திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியின் செலவுகள்

08/12/2020 03:55 PM

நாடாளுமன்றம், கோலாலம்பூர், 08 டிசம்பர் (பெர்னாமா) -- தேசிய பொருளாதார மீட்புத் திட்டம், பென்ஜானாவின் கீழ் ஒதுக்கப்பட்ட மூவாயிரத்து 500 கோடி ரிங்கிட்டில், கடந்த நவம்பர் 20-ஆம் தேதி வரையில், 42 விழுக்காடு அல்லது 1,458 கோடி ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளன.

அத்திட்டத்தின் முக்கிய அம்சங்களில், முதல் அம்சத்தில் ஒதுக்கப்பட்ட 1,320 கோடி ரிங்கிட்டில், 715 கோடி ரிங்கிட் அல்லது 54 விழுக்காடு பயன்படுத்தப்பட்டதில், 13 லட்சத்து 60 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக, நிதியமைச்சர், தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் அப்துல் அசிஸ் தெரிவித்திருக்கிறார்.

நாட்டில் வர்த்தகத்தை மேலோங்கச் செய்வதற்கான இரண்டாவது அம்சத்தில் ஒதுக்கப்பட்ட 1,470 கோடி ரிங்கிட்டில், 38 விழுக்காடு அல்லது 554 கோடி ரிங்கிட் செலவிடப்பட்டதில், 40 ஆயிரம் வர்த்தகங்கள் பயனடைந்துள்ளன.

பொருளாதாரத்தைத் தூண்டும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட மூன்றாவது அம்சத்திற்கு 710 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்ட வேளையில், அத்தொகையில் இருந்து 27 விழுக்காடு அல்லது 190 கோடி ரிங்கிட் செலவிடப்பட்டு, ஒரு கோடியே 13 லட்சத்து 60 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

இன்று, மக்களவையில் கேள்வி பதில் நேரத்தின்போது, பென்ஜானா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட தொகை மற்றும் அதனால் பயனடைந்தவர்கள் குறித்து, காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ அப்துல்லா சானி அப்துல் ஹமிட் எழுப்பிய கேள்விக்கு, தெங்கு சஃப்ருல் அத்தகவல்களைத் தெளிவுப்படுத்தினார்.

--பெர்னாமா