பொது

ஆலயங்கள் உடைக்கப்படும் விவகாரம்; கெடா மந்திரி புசார் விவரம் தெரியாதவராக இருப்பதாக குற்றச்சாட்டு

04/12/2020 05:00 PM

சுங்கைப்பட்டானி, 04 டிசம்பர் (பெர்னாமா) -- சுதந்திரத்திற்கு முன்பும் நாட்டின் அரசியல் சாசனம் வரையப்படுவதற்கு முன்பும் உருவான ஆலயங்கள் சட்ட விரோதமானவை என்று கூறும் கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நோர் விவரம் தெரியாதவராக இருப்பதாக மலேசிய முன்னேற்ற கட்சியான எம்.ஏ.பி.-இன் கெடா மாநில துணைத் தலைவர் ஏ.விவேக் தெரிவித்துள்ளார்.

பல இன, சமய மக்கள் வாழும் இந்நாட்டின் வரலாற்றையும் இந்திய சமுதாயம் நாட்டிற்கு அளித்துள்ள பங்களிப்பையும், இதற்கு முன்பிருந்த அரசுகள் சீர்தூக்கிப் பார்த்த வேளையில், இன்றைய கெடா மந்திரி புசாரும் அவரின் நிர்வாகத்தினரும் அவை பற்றி அறியாதவர்களாக உள்ளனர்.

அதனால்தான், இயந்திரங்களைக் கொண்டு இந்து ஆலயங்களை உடைத்து வருவதாக அவர் வருத்தம் தெரிவித்தார்

கெடாவில் தற்பொது அமைந்திருக்கும் ஆட்சி, சமய சகிப்புத்தன்மை இன்றி செயல்படுகிறது. 

எதையும் கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் நல்லிணக்க அடிப்படையில் அணுகாமல் தன்னிச்சையாக செய்யும் போக்கினால், இந்து சமுதாயம் மட்டும் பாதிப்புக்கு ஆளாகவில்லை. மாறாக, மற்ற சமயத்தினரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

மக்களிடையே நிலவும் பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை காண்பது ஆகியவற்றை மதிக்காத போக்கு இன்றைய கெடா மந்திரி புசாரிடம் காணப்படுகிறது.

இந்து ஆலயங்களையும் மற்ற வழிபாட்டு தலங்களையும் இடித்துத் தள்ளும் போக்கு தொடருமானால் அது ஒருமித்து வாழும் சமூகத்தில் வெறுப்பையும் பிரிவு மனப்பான்மையையும் ஏற்படுத்தும் என்று எம்.ஏ.பி. மத்திய செயலவை உறுப்பினருமான ஏ.விவேக் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-- பெர்னாமா