சிறப்புச் செய்தி

அசாத்திய சாதனைகளின் சிகரம் மாற்று திறனாளிகள்

03/12/2020 03:18 PM

விஸ்மா பெர்னாமா, கோலாலம்பூர், 03 டிசம்பர் (பெர்னாமா) -- உடற் குறைபாடுகளை எதிர்த்து, சமூகத்தில் எதிர் நீச்சல் போடும் மா மனிதர்கள் மாற்றுத் திறனாளிகள்.

ஊனம் என்பது பலவீனம் அல்ல. தங்கள் குறைபாடுகளைத் தகர்த்து பல துறைகளில் அசாத்திய சாதனைகளைப் புரிந்து வரும் உண்மை போராளிகள், மாற்றுத் திறனாளிகள்.

மாற்றுத் திறனாளிகளைக் கண்டால் இரக்கம் கொள்ளும் மனம், இன்று அவர்களின் அசாத்திய சாதனைகளையும் வெற்றிகளையும் கண்டு பூரிப்பதாக மலேசிய சமூகநல இலாகாவின், மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுப் பிரிவின் மூத்த தலைமை துணை இயக்குநர் பத்மநாதன் நல்லசாமி தெரிவித்திருக்கிறார். 

இன்று அனைத்துலக மாற்றுத் திறனாளிகள் தினம். உலக மக்கள் தொகையில் 15 விழுக்காடு பேர், மாற்றுத் திறனாளிகள். இதில் 80 விழுக்காடு பேர் ஏழை நாடுகளில் உள்ளதாகப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

மாற்றுத் திறனாளின் உரிமைகளையும் நலன்களையும் பேணி காத்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3-ஆம் நாளை அனைத்துலக மாற்றுத் திறனாளிகள் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வையை, இயல்பான மனநிலையிலிருந்து நீக்க வேண்டும் என்பதே இந்நாளின் முதன்மை நோக்கமாகும்.

மலேசியாவைப் பொருத்தமட்டில் மாற்றுத் திறனாளிகள் எப்போதும் புறக்கணிக்கப்படாமல், அவர்களுக்குரிய அங்கீகாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சமூகநல உதவித் தொகை 50 ரிங்கிட் அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பத்மநாதன் கூறினார். 

கொவிட் பெருந்தொற்றினால் வருமானம் இழந்து பாதிக்கப்பட்டவர்களில் மாற்றுத் திறனாளிகளும் அடங்குவர்.

அத்தகையோர் தங்களின் பிரச்சனைகளை உரிய தரப்பிடம் தெரிவித்தால், உடனே அது செவிமடுக்கப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் பத்மநாதன் தெரிவித்தார்.

''குறிப்பாக, பணி புரியும் மாற்று திறனாளிகளுக்கு அவ்வுதவி தொகை ரிங்கிட் மலேசியா 400-லிருந்து 450-ஆக ஏற்றம் கண்டுள்ளது. அதேவேளையில், பணி புரியாத மாற்று திறனாளிகளுக்கு வழங்கும் உதவி தொகையும் ரிங்கிட் மலேசியா 250-லிருந்து 300-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. செயலற்ற மாற்று திறனாளிகளுக்கு ரிங்கிட் மலேசியா 350-லிருந்து 500-ஆக அதிகரித்ததோடு அந்த உதவி தொகை அடுத்த ஆண்டு தரப்படும்,'' என்று பத்மநாதன் நல்லசாமி கூறினார்.

இதுபோன்ற உதவிகள் கிடைத்தால் மாற்றுத் திறனாளிகளும் தங்களுக்குக் கிடைக்கும் வேலை வாய்ப்புகளை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பத்மநாதன் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, ஆண்டுதோறும் மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்விற்காக அரசாங்கம் பல்வேறு உதவிநலத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்களின் மூலமாக பல மாற்றுத் திறனாளிகள் முழு பலன் அடைந்துள்ளனர்.

அரசாங்கத்துடன் சேர்த்து தனியார் துறைகளும், நிறுவனங்களும், அமைப்புகளும், பொதுமக்களும் தோள் கொடுத்தால் உலகை நம்பிக்கையுடன் எதிர்நோக்கும் மாற்றுத் திறன் கொண்டவர்களின் வாழ்வதாரத்தை மாற்றி அமைக்க முடியும் என்றும் பத்மநாதன் நம்பிக்கை தெரிவித்தார். 

-- பெர்னாமா