சிறப்புச் செய்தி

மலேசிய எழுத்தாளருக்கு தமிழ்நாட்டின் ‘கரிகாற்சோழன் விருது’

02/12/2020 07:55 PM

கோலாலம்பூர், 2 டிசம்பர் (பெர்னாமா) -- 2007ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வெளிவரும் எழுத்து படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில், சிறந்த நூல், தேர்வு செய்யப்பட்டு ‘கரிகாற்சோழன் விருது’ தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், மலேசிய எழுத்தாளர் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது பெருமை அளிப்பதாக மலேசிய எழுத்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் தொழிலதிபர் முஸ்தபா அறக்கட்டளை சார்பாக, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில், அயலக கல்வித்துறையில் தமிழவேள் கோ சாரங்கபாணி ஆய்விருக்கை வழியாக இதர நாட்டு தமிழ் படைப்புகளுக்கு, இந்த அங்கீகாரம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், 2018 ஆம் ஆண்டுக்குரிய மலேசியாவிற்கான இவ்விருதை மூத்த எழுத்தாளர் ஏ.எஸ்.பிரான்சிஸ் எழுதிய ''வானம் என் போதி மரம்'' எனும் கவிதை நூலுக்கு வழங்கப்பட்டதாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. ராஜேந்திரன், பெர்னாமா தமிழ்ச்செய்தியிடம் தெரிவித்தார்.

''நம் கவனத்திற்கு எட்டியவரை தமிழ்நாட்டு பல்கலைக்கழகத்திலிருந்து நமது இலக்கியத்திற்கு கிடைக்கின்றன மிகப்பெரிய அங்கீகாரமாக இந்த விருது கருதப்படுகிறது. இந்த விருதை பெருகின்ற எழுத்தாளர்களுக்கு குறிப்பாக பிரான்சிஸ்க்கு என மனமார்ந்த வாழ்த்துகள்,'' என்றார் அவர்.

கரிகாற்சோழன் விருதுக்கான மலேசிய ஒருங்கிணைப்பு அமைப்பாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இயங்கி வருவதாக ராஜேந்திரன் குறிப்பிட்டார்.

இதனிடையே, கடந்த 40 ஆண்டுகளாக புதுக்கவிதை எழுதி வரும் பிரான்சிஸ் இந்த ‘கரிகாற்சோழன்’ விருதை தமக்கு கிடைத்ததை மிகப் பெரிய அங்கீகாரமாக கருதுகின்றார்.

''இந்த விருது மிகப் பெரிய விருதாக கருதுகின்றேன். இதற்கு முன் பல விருதுகளை பெற்றிருந்தாலும் இந்த விருது எனது எழுத்து துறைக்கு கிடைத்ததற்கு மிகவும் பெருமை அடைகின்றேன்,'' என்றார் அவர்.

இதுபோன்ற விருதுகள், எழுத்தாளர்களுக்கு ஊக்குவிப்பாக அமைவதுடன், அதிகமான இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் நம்புகின்றார்.

--பெர்னாமா