உலகம்

புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

27/11/2020 01:18 PM

ஹர்யானா, 27 நவம்பர் (பெர்னாமா) -- இந்திய அரசாங்கத்தின் புதிய விவசாய சட்டங்களை அகற்றுமாரு கோரி வடக்கு ஹரியானாவில் ஆயிரக் கணக்கான விவசாயிகள் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கின்றனர்.

இப்புதியச் சட்டங்கள், தங்களின் வருமானத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு வர்த்தக நிறுவனங்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் என்ற அச்சத்தை விவசாயிகளிடையே ஏற்படுத்தி இருக்கிறது.

இதனை எதிர்த்து, நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள, விவசாயிகள், டிரெக்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் புது டெல்லிக்கு பயணம் செய்திருக்கின்றனர்.

பயணத்தின்போது, ஆம்பல மாவட்டத்திற்கு அருகில், ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசாரின் தடுப்புகளை ஆற்றில் வீசியதோடு அவர்கள் மீது கற்களை வீசி எரிந்ததால், போலீசார் கண்ணீர் புகையை பயன்படுத்த நேரிட்டது.

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

இது விவசாயிகளுக்கு எதிரான நியாயமற்ற செயல் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டி இருக்கின்றனர்.

அதோடு, அமைதியான முறையிலான ஆர்ப்பாட்டம் அரசியலமைப்பு முறைப்படி சரியானது என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுக்க, புது டெல்லி மற்றும் ஹர்யானா எல்லைப்பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் நிறுத்தப்பட்டனர்.

அரசாங்கம் உறுதியளித்த விலையில் தங்களின் தானியங்களை வாங்குவதை நிறுத்துவதற்கும், வர்த்தக நிறுவனங்கள் அதை மலிவான விலையில் வாங்கவும், கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட விவசாயிகள் சார்ந்த சட்டங்கள் வழிவகுக்கும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கி வரும் விவசாயிகள், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் மட்டும் 20,638 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டின் தேசிய குற்றப்பதிவுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

--பெர்னாமா