விளையாட்டு

உலக காற்பந்து ஜாம்பவான், டியாகோ அர்மாண்டோ மரடோனா  காலமானார்

26/11/2020 07:52 PM

அர்ஜெண்டினா, 26 நவம்பர் (பெர்னாமா) -- உலக காற்பந்து ஜாம்பவான், டியாகோ அர்மாண்டோ மரடோனா  காலமானதை முன்னிட்டு நாடு மூன்று நாட்களுக்கு இரங்கல் தெரிவிக்கலாம் என்று அர்ஜெண்டினா அரசாங்கம் புதன்கிழமை அறிவித்திருக்கிறது. 

அர்ஜெண்ட்டினா காற்பந்து அணியின் சகாப்தமான, டியாகோ அர்மாண்டோ மரடோனா மரணமடைந்த நாள் தொடங்கி மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு நடைப்பெறும் என்று அர்ஜெண்டினாவின் ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ் ஓர் அறிக்கையில் அறிவித்திருக்கிறார். 

மரடோனா புதன்கிழமை பியுனஸ் அயர்ஸ் வடக்கில் டைகர் பகுதியிலுள்ள அவரின் வீட்டில் மாரடைப்பினால் காலமாகியிருக்கிறார்.  

அர்ஜெண்டினா காற்பந்து அணியின் முன்னாள் ஆட்டக்காரரும் மேலாளருமான அவருக்குக் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி, மூளையின் இரத்த கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

மரடோனா சில நாட்களுக்காக உடல்நலப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருந்ததையும், அவரின் வீட்டிலே மருத்துவர்களால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்ததைப் பற்றியும் அர்ஜென்டினா குழு தெரிவித்துள்ளது. 

சர்வதேச அளவில் புகழ்பெற்ற மரடோனா, பார்சிலோனா மற்றும் நப்போலி அணிக்காக விளையாடியது மட்டுமின்றி, இத்தாலி சங்கத்துடன் இணைந்து இரு 'சீரி எ' என்ற பட்டங்களை வென்றுள்ளார். 

உலகக் காற்பந்து கோப்பை போட்டியில் நான்கு முறை விளையாடிய அர்ஜெண்டினாவின் வரலாற்று கோல் மன்னன் டியாகோ மரடோனா, அர்ஜெண்டினாவைப் பிரிதிநிதித்து 91 சர்வதேச போட்டிகளில் 34 கோல்கள் அடித்திருக்கிறார். 

மேலும், தனது நாட்டை 1990-ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற காற்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்திற்குக் கொண்டு சென்ற பெருமை மரடோனாவையே சேரும். 

எனினும், அவ்வாட்டத்தில் அவரின் அணி ஜெர்மனியின் மேற்கு பகுதி அணியிடம் தோல்வியைச் சந்தித்துள்ளது.

மரடோனா, போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளார் என்று எபெட்ரின் வகை போதைப்பொருள் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட பிறகு, அவர் 1994-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு முறை அமெரிக்கா அணியை வழிநடத்துவதற்கான பணியிலிருந்தும் நீக்கப்பட்டார். 

1991-ஆம் ஆண்டு மேற்கொண்ட சோதனையில், கொக்கெய்ன் வகை போதைப்பொருளுக்கு அடிமையாகியிருப்பது தெரிய வந்தததால், அவர் 15 மாதம் காற்பந்து உலகிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். 

அதுமட்டுமின்றி, அவர் தனது 37-வது பிறந்தநாளில், 1997- இல் காற்பந்து உலகிலிருந்து பணி ஓய்வு பெற்றுள்ளார். 

-பெர்னாமா