சிறப்புச் செய்தி

பெர்னாமாவின் தலைவராக ராஸ் அடிபா நியமிக்கப்பட்டார்

24/11/2020 07:26 PM

நாடாளுமன்றம், கோலாலம்பூர், 24 நவம்பர் (பெர்னாமா)-- தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் தலைவராக தாம் நியமிக்கப்பட்டிருப்பது பெண்களுக்கு மட்டும் இல்லாமல் மாற்று திறனாளிகளையும் பெருமைப்படுத்துவதாகச் செனட்டர் ராஸ் அடிபா முகமட் ரட்ஸி தெரிவித்தார்.

மூத்த தொலைக்காட்சி பிரபலமும் மாற்றுத் திறனாளியுமான ராஸ் அடிபா, 53 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இச்செய்தி நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் என்பது சரித்திரபூர்வ ஒரு நிகழ்வாகும்.

கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி பதவி விலகிய சுஹைமி சுலைமானுக்குப் பதிலாக, பெர்னாமாவின் வாரியத் தலைவர் பதவிக்கு ராஸ் அடிபா நியமிக்கப்படுவதாக தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோ சைஃபுடின் அப்துல்லா இன்று அறிவித்தார்.

இந்தச் செய்தி நிறுவனம் சமீபத்திய செய்திகள் மற்றும் நிலவரங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் சிறந்த படைப்புகளை வெளிப்படுத்துவதன் மூலமாக மக்களின் மனதை கவர முயற்சிக்க வேண்டும் என்று 52 வயதுடைய ராஸ் அடிபா தெரிவித்தார்.

''நான் அந்தக் குழுவை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். ஏனென்றால், பெர்னாமாவில் சிறந்த குழுவினர் உள்ளனர். எனவே, நான் அனைவரையும் சந்திக்க வேண்டும். மக்கள் கவர்ந்து முக்கியமான செய்திகள் ஏற்கனவே உள்ளன. நடப்பு விவரங்கள் நான் முன்பு கூறியது போல நாம் ஒரு செய்தியை புகார் அளிக்க முடியாது,'' என்று அவர் கூறினார்.

தொலைக்காட்சி மற்றும் வானொலி வாயிலாகப் பெர்னாமாவின் சேவைகளின் வழி மாற்றுத் திறனாளிகளும் பயன்பெற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்வாண்டு மே 20-ஆம் தேதி செனட்டராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்ட RAS ADIBA, மேலவையின் மாற்றுத்திறனாளி சமுகத்தின் பிரதிநிதியும் ஆவார்.

-- பெர்னாமா