பொது

கம்போங் நஹாபா, கம்போங் தெகூடுன்னில் இன்று பி.கே.பி.டி அமல்

20/11/2020 05:36 PM

கோத்தா பெலுட், 20 நவம்பர் (பெர்னாமா) -- சபா,பெக்கான் கோத்தா பெலூட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கம்போங் நஹாபா மற்றும் கம்போங் தெகூடுன்னில் இன்று தொடங்கி அமல்படுத்தப்பட்டு வரும் கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவான PKPD காரணமாக அப்பகுதிகள் மிகவும் அமைதியாகக் காணப்படுகின்றன.   

அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே இருப்பதும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடாததும் பெர்னாமா மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்தது.

இராணுவ உறுப்பினர்கள் மற்றும் ரேலா எனப்படும் தன்னார்வத் துறையின் ஒத்துழைப்புடன் அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் அக்குடியிருப்பு பகுதிகளின் பிரதான நுழைவாயில்களில் இன்று தொடங்கி சாலை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கம்போங் சயாப் மற்றும் கம்போங் தோரிந்திடோன் ஆகிய குடியிருப்பு பகுதிகளுக்கும் அதே பிரதான நுழைவாயில்கள் பயன்படுத்தப்படுகின்றன.   

இதன் காரணமாக, அப்பகுதி குடியிருப்பு பகுதி மக்கள் மட்டுமே அங்கிருந்து வெளியேறுவதையும் மீண்டும் உள்ளே நுழைவதையும் உறுதி செய்யும் நோக்கத்திற்காக, அங்கு சிவப்பு மற்றும் பச்சை நிற அட்டைகளை அமலாக்கத் தரப்பினர் பயன்படுத்துகின்றனர்.   

கம்போங் நஹாபா மற்றும் கம்போங் தெகூடுன்னில் வசிக்கும் ஏறக்குறைய 1,700 பேருக்கு PKPD அமலில் இருக்கும் அப்பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

செயல்பாட்டு தர விதிமுறையான எஸ்.ஓ.பி-களின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட விவகாரங்களுக்காக மட்டுமே அப்பகுதியில் இருந்து வெளியில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 

-- பெர்னாமா