பொது

சிலாங்கூரில் நீர் விநியோகத் தடை கட்டங்கட்டமாக சீரடையும்

18/10/2020 12:41 PM

கோலாலம்பூர், 18 அக்டோபர் (பெர்னாமா) -- பெட்டாலிங், கோம்பாக், கிள்ளான், ஷா ஆலம், உலு சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரின் 686 பகுதிகளில் ஏற்பட்ட நீர் விநியோகத் தடை இன்று மதியம் 2 மணிக்கு மேல் கட்டங்கட்டமாக சீரடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு ஆலை 1-இல் சுத்திகரிக்கப்பட்ட நீர் செல்லும் குழாய் ஒன்று உடைந்ததைத் தொடர்ந்து, இன்று காலை 8 மணியளவில் அது முழுமையாகச் சரிச் செய்யப்பட்டுவிட்டதாக ஆயிர் சிலாங்கூர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியது.  

சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு ஆலை 1 அதன் செயல்பாட்டைத் தொடங்கி இருக்கும் வேளையில் கட்டங்கட்டமாக நீர் விநியோகிக்கப்படும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

அதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை வழங்க சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு ஆலை 3, வங்சா மாஜு, சுங்கை பத்து மற்றும் புக்கிட் நெனாஸ் நீர் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்து நீர் விநியோகிக்கப்பட்டது.    

மருத்துவமனைகள், இரத்த சுத்திகரிப்பு மையங்கள் மற்றும் சில வீடமைப்பு பகுதிகளுக்கு 84 நீர் விநியோக லாரிகள் மூலம் நீர் விநியோகிக்கப்பட்டது.  

-- பெர்னாமா