பொது

சிலாங்கூரில் நீர் விநியோகம் 77 விழுக்காடு சீரடைந்திருக்கிறது

07/10/2020 07:26 PM

கோலாலம்பூர், 7 அக்டோபர் (பெர்னாமா) -- சிலாங்கூரில் ஏற்பட்ட திட்டமிடப் படாத நீர் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்ட 274 பகுதிகளிலிருந்து, 77 விழுக்காடு, அதாவது 210 பகுதிகளில் நீர் விநியோகம் சீரடைந்திருக்கிறது. 

எஞ்சிய 64 பகுதிகளில் நீர் தட்டுப்பாடு கட்டம் கட்டமாக சீரடைந்து வருவதாக, ஆயிர் சிலாங்கூர் நிறுவனத்தின் நிர்வாக தொடர்பு தலைவர் எலேனா பஸ்ரி தெரிவித்தார். 

ஆயிர் சிலாங்கூரின் மீட்பு திட்ட அட்டவணையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோக முறை சீராக இயங்குவதை உறுதி செய்ய அதிகமான நீரை சேமித்து பயன்படுத்த வேண்டாம் என்று பயனீட்டாளர்களை அவர் கேட்டுக் கொண்டார். 

அதோடு, பாதிக்கப்பட்ட இடங்கள் சீரடையச் செய்ய, விநியோக முறையை நிலைப்படுத்தும் நடவடிக்கையை ஆயிர் சிலாங்கூர் முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். 

சுத்திகரிக்கப்படாத நீர் வளத் தூய்மைக்கேட்டினால், சுங்கை செமினி மற்றும் புக்கிட் தம்போய் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பெட்டாலிங், உலு லஙாட், கோலா லஙாட், சிப்பாங், புத்ராஜெயா ஆகிய பகுதிகளில், நீர் விநியோகத் தடை ஏற்பட்டது. இதனால், 3 லட்சத்து 9,687 பயனீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர். 

-- பெர்னாமா