உலகம்

சில வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு

24/09/2020 01:57 PM

புது டில்லி , 24 செப்டம்பர் (பெர்னாமா)  -- இந்தியாவில், கொவிட்-19 நோயினால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், அந்நோயிலிருந்து குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தினசரி அதிகரித்து வருகிறது. 

கொவிட்-19 நோயிலிருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளிலும் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. இதுவரை 4,674,987 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்திருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது. 

கனடா 

கொவிட்-19 நோயின் இரண்டாவது அலையை கனடா எதிர்நோக்கியிருப்பதாக அதன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருக்கிறார். கடந்த மார்ச் மாதத்தில் ஏற்பட்ட தாக்கங்களை விட, இம்முறை நிலைமை மிகவும் மோசமாக இருக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். இந்த பெருந்தொற்றால், கனடாவில் இதுவரை 147,753 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 

அமெரிக்கா

அமெரிக்காவில் கொவிட்19 நோயிற்கான தடுப்பூசிகளின் பரிசோதனைகள் இறுதிகட்ட நிலையில் இருப்பதாக அதன் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னதாக தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு வழங்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

இந்தியா

இந்தியா, மகாராஷ்டிரா மாநிலம் பிவண்டியில் மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது. 1984ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த கட்டிடம் திங்கட்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது. 

கொரியா

இவ்வாரம் வட கொரியாவுடனான சர்ச்சைக்குரிய கடல் எல்லைக்கு அருகே அரசாங்கக் கப்பலில் இருந்து காணாமல் போன தென் கொரிய அதிகாரி ஒருவர் வட கொரிய இராணுவத்தால் கொல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டிருப்பதாக தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இக்கொடூரச் செயலுக்கு பொறுப்பேற்று, இதற்கு காரணமானவர்களை தண்டிக்கும்படி தென் கொரியா, வட கொரியாவை வலியுறுத்தி வருகிறது. 


-பெர்னாமா