விளையாட்டு

விளையாட்டுச் செய்திகளின் தொகுப்பு

19/09/2020 04:26 PM

லண்டன், 19 செப்டம்பர் (பெர்னாமா) -- இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கடந்த பருவத்தில் மூன்றாவது இடைத்தைப் பிடித்திருந்த மன்செஸ்டர் யுனைட்டெட் இப்பருவத்தில் தனது முதல் ஆட்டத்தில் கிரிஸ்டல் பேலஸுடன் இன்று பின்னிரவு களம் காணவிருக்கிறது. புதிய பருவத்தை முன்னிட்டு, மன்செஸ்டர் யுனைட்டெட் புதிய ஆட்டக்காரர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது அதன் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இருந்தபோதிலும், இருக்கின்ற அணியை வைத்து இம்முறை சிறந்த ஆட்டத்தை மன்செஸ்டர் யுனைட்டெட் வெளிப்படுத்தும் என்று அதன் நிர்வாகி ஒலே கன்னர் சோல்ஸ்கர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, முதல் ஆட்டத்தை வெற்றிகொண்ட உத்வேகத்தில் ஆர்சனல் இரண்டாம் ஆட்டத்தில் நாளை அதிகாலை வெஸ்ட் ஹெமைச் சந்திக்கவுள்ள வேளையில், எவர்ட்டனும் வெஸ்ட் புரோமும் முதல் ஆட்டத்தில் களமிறங்குகின்றன.  

பாயன்
மற்றுமொரு நிலவரத்தில், ஜெர்மனியின் பண்டஸ்லீகா கிண்ண காற்பந்து போட்டியில், நடப்பு வெற்றியாளரான பாயன் முனிக் 8-0 என்ற கோல்களில் ஷல்கேவை வீழ்த்தி அதிரடியாக புதிய பருவத்தை தொடங்கியுள்ளது. அதன் முன்னணி ஆட்டக்காரரர் செர்ஜ் நெம்பிரி மூன்று கோல்களை அடித்து ஹெட்ரிக் சாதனையைப் படைத்துள்ளார். 

ரோம்
நிறைவாக, இத்தாலி, ரோமில் நடைபெற்று வரும் இத்தாலிய பொது டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அட்டத்தில்,  நேரடி செட்களில் வெற்றிக்கொண்டதன் வழி, நோவாக் ஜொகோவிச் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

அதுபோல, ஒன்பது முறை வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றி இருக்கும் ஸ்பெயின் ரஃபெல் நடாலும் மற்றுமொரு ஆட்டத்தில், 6-1, 6-3 என்ற நேரடி செட்களின் வழி டுசான் லஜொவிச்சை வீழ்த்தி வெற்றிகரமாக காலிறுதியில் கால் பதித்தார். 

-- பெர்னாமா