பொது

செப்டம்பர் 16: மலேசியாவின் சிறப்புக்குரிய நாள்

16/09/2020 07:42 PM

கோலாலம்பூர், 16 செப்டம்பர் (பெர்னாமா) -- செப்டம்பர் 16, 1963 உலக வரலாற்றில் ஒரு முக்கிய தினமாகும். மலாயா, சிங்கப்பூர், சபா மற்றும் சரவா, ஒரு நாடாக இணைந்து  'மலேசியா' என உருவாக்கம் கண்ட சிறப்புக்குரிய நாள்.

இன்றைய மலேசியா சுதந்திரம் பெற்ற போது 'மலாயா' என்றே அழைக்கப்பட்டது. 

1961-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி, தேச தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் சிங்கப்பூரிலுள்ள 'Adelphi' தங்கும் விடுதியில் தென்கிழக்காசியப் பத்திரிக்கையாளர் மாநாட்டில் உரையாற்றிய போது மலேசிய உருவாக்கம் குறித்து விவரித்தார்.

நாடு வளர்ச்சியடைய வேண்டும், மக்கள் சுபீட்சமாக வாழ வேண்டும். அதற்கு,  அரசியல் மற்றும் பொருளாதார மேம்பாட்டில் மலாயா-சபா-சரவா-சிங்கப்பூர் ஆகியவை ஒரே நாடாக, ஒரே குறிக்கோளோடு செயல்படுவது அவசியம் என துங்கு விருப்பம் கொண்டார்.

மேலும், கம்யூனிட்ஸ் ஆதிக்கத்தை ஒடுக்கி அமைதியை நிலை நாட்ட மலாயாவோடு  ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் துங்கு கேட்டு கொண்டார்.

எனவே, தீபகற்ப மலேசியா, சபா, சரவாக் ஆகிய பகுதிகள் ஒன்றாக இணையவும் ஒரே குடையின் கீழ் ஆட்சிக்கு உட்படுத்தவும் கோபோல்ட் (COBBOLD) ஆணையம் 1962-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதியன்று தேசிய உடன்படிக்கை செயற்குழுவால் நிறுவப்பட்டது.

இதனால் பல சர்ச்சைகள் எழுந்தாலும், ஆக்ககரமான கருத்துகளும் கிடைக்கப்பெற்றன. இறுதியில் சிங்கப்பூர்- சபா- சரவா,  ‘மலேசியா’ அமைப்பின் உருவாக்கத்திற்கு சம்மதம் தெரிவித்தன. 

அவ்வகையில், 1963-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி மெர்டேக்கா அரங்கத்தில் மாட்சிமை தங்கிய பேரரசர், சிங்கப்பூர், சபா, சரவா பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு வருகையாளர்கள், சுமார் 30,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் ‘மலேசியா’ உருவாக்கத்தை  பிரகடனப்படுத்தினார்.

பின்னர், 1965-ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவை விட்டுப் பிரிந்தாலும், சபா, சரவா  தொடர்ந்து மலேசியாவில் இணைந்திருக்க ஒப்புக்கொண்டன.

வரலாற்று முத்திரைப் பதித்த இந்நாளை, கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் பொது விடுமுறை தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. 

பல பரிணாமங்களை கடந்து வந்திருக்கும் மலேசியா, இன்று பல துறைகளில் உலகம் போற்றும் நாடாக விளங்குகிறது. 

கொவிட்-19 காராணமாக உலகம் இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்கி வரும் வேளையில், சமூக பொருளாதார நலன் கருதி நாட்டு மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் அறிவுறுத்திருக்கின்றார்.

மலேசியா நமது நாடு. மலேசியாவை  நேசிப்போம். மலேசியாவை வளம் பெற செய்வோம்.

அனைவருக்கும் பெர்னாமா தமிழ்ச்செய்தியின் மலேசிய தின வாழ்த்துகள்.

-- பெர்னாமா