பொது

ஆசிய சாதனை புத்தகத்தில் மலேசிய தமிழ்த் திரைப்படம் 'பரமபதம்'

28/08/2020 04:27 PM

கோலாலம்பூர், 28 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்று தற்போது தனது அடுத்தக்கட்ட இலக்கான ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம்பெறுவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது, மலேசிய தமிழ்த் திரைப்படம் 'பரமபதம்'.

ஆண்டுதோறும் பல மலேசிய திரைப்படங்கள் வெளியிடு காணும் நிலையில், பரமபதம் திரைப்படத்திற்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதற்கு பல கூறுகள் இருப்பதாக அப்படத்தின் இயக்குநர் விக்னேஸ் பிரபு தெரிவித்தார். 

நாட்டில் தயாரிக்கப்படும் முழுமைப்பெற்ற திரைப்படங்கள் மலேசிய தணிக்கைச் சான்றிதழைப் பெற்ற பிறகு, அவை அனைத்துலக ரீதியில் நடத்தப்படும் திரைப்பட விருது நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான முதன்மை தகுதியைப் பெறுகின்றன. 

இந்நிலையில், ஆசிய சாதனை புத்தகக் குழுவினர் நிர்ணயித்திருக்கும் அனைத்து தொழில்நுட்ப கூறுகளையும் ஒரு திரைப்படம் பூர்த்திச் செய்திருந்தால் மட்டுமே, அது அப்போட்டியில் இடம்பெறுவதற்கான தகுதியை பெறும் என்றும் விக்னேஸ் பிரபு மேலும் கூறினார்.

அதேவேளையில், மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான ஃபினாஸ்-இன் (FINAS) அனுமதி சான்றிதழையும் வைத்திருப்பதோடு, ஒரு வித்தியாசமான பாணியில் அமைந்திருக்கும் திரைக்கதையைக் கொண்டிருக்கும் எந்தவொரு திரைப்படமும் இதுபோன்ற போட்டிகளில் தாராளமாகக் கலந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

இவ்வாண்டு நவம்பர் 26-ஆம் தேதி தொடங்கி மலேசிய திரையரங்குகளில் பரமபதம் திரையிடப்படும்.    

-- பெர்னாமா