பொது

ஷா ஆலம் நகராண்மை கழகத்தின் நான்கு அதிகாரிகள் ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்

12/08/2020 04:29 PM

புத்ராஜெயா, 12 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சிலாங்கூர் சுங்கை பூலோவில் சட்டவிரோத வியாபாரங்களை பாதுகாக்கும் பொருட்டு கையூட்டுப் பெற்றதாக நம்பப்படும் நான்கு ஷா ஆலம் நகராண்மை கழக அதிகாரிகள் ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப் பட்டிருக்கின்றனர்.

அதோடு கடந்த ஓராண்டு காலமாக கடத்தல் சிகரெட்  விற்பதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் மாதம் 300 ரிங்கிட் கையூட்டு வழங்கிய இந்தோனேசிய பிரஜை ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

அவர்கள் அனைவரையும் இன்று தொடங்கி ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரையில் தடுத்து வைக்க புத்ராஜெயா மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ஷா வீரா அப்துல் ஹலிம் உத்தரவிட்டிருக்கிறார்.

இது தொடர்பான விசாரணை  2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டம் செக்‌ஷன் 17 உட்பிரிவு ஏ-வின் கீழ் நடத்தப்படும்.

முன்னதாக, காலை 8.40 மணியளவில், 41 வயதிலிருந்து 45 வயதிற்கு உட்பட ஐந்து ஆடவர்கள், புத்ராஜெயா மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

இவ்விவகாரம் தொடர்பில், சுங்கை பூலோ கிளையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் மற்றும் ஷா ஆலம் கிளையைச் சேர்ந்த ஒரு அதிகாரியும், கைதுச் செய்யப்பட்டதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம். உறுதிப்படுத்தி இருந்தது.

உரிமம் இல்லாமல் செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்வதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாதத்திற்கு, 300 ரிங்கிட்டிலிருந்து 3,500 ரிங்கிட் வரையில் கையூட்டு பெற்றதாக நம்பப்படுகிறது.

-- பெர்னாமா