உலகம்

சில உலக நாடுகளின் செய்தி தொகுப்பு

11/08/2020 07:58 PM

கலிபோர்னியா, 11 ஆகஸ்ட் (பெர்னாமா) -- அமெரிக்கா, கலிபோர்னியா நியூபோர்ட் கடற்கரையில் நடைபெற்ற சமய விழாக்களில் பங்கேற்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர். அங்கு கலிபோர்னியா போலீஸ்காரர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாக அவர்கள் தெரிவித்தனர். தொடுகை இடைவெளியைக் கடைபிடிக்கவும், சுவாசக் கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டிருந்தும், அந்த எண்ணிக்கையில் ஒரு பகுதியினர் அதை பின்பற்றத் தவறியிருக்கின்றனர். 

லெபனான் 

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்புப் பணிகளுக்கு உதவ பல நாடுகள், தங்களின் தன்னார்வலர் குழுக்களை அனுப்பியுள்ளது. பல நாட்களாக அங்கு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், கட்டிட இடிபாடுகளில் குறைந்தது 60 பேர் சிக்கி இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது. 

அமெரிக்கா

அமெரிக்கா, மிட்வெஸ்ட் பகுதிகளில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் சூறாவளி தாக்கியதில், அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சூறாவளி மற்றும் கனமழையால், மரங்கள், தொலைத்தொடர்பு கம்பங்கள் சாய்ந்ததோடு, வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன. 

அமெரிக்கா

அமெரிக்காவில் 44 ஆயிரம் புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியதைத் தொடர்ந்து, இந்நோய் கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,085,821-ஆக பதிவு செய்யப்பட்டிருப்பதாக JOHNS HOPKINS பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் குழந்தைகள் தொடர்பான தொற்றுகள் 40 விழுக்காடு வரை அதிகரித்திருப்பதாக அந்நாட்டின் குழந்தை மருத்துவமனை சங்க கழகம் தெரிவித்தது. 

உலக நாடுகள்

உலகம் முழுவதும் இதுவரை, இரண்டு கோடியே 269,353 பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்றியிருப்பது உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. இந்நோயினால் இதுவரை, ஏழு லட்சத்து 39 ஆயிரத்து 428 பேர் உயிரிழந்திருப்பதோடு, ஒரு கோடியே 31 லட்சத்து 99 ஆயிரம்105 பேர் குணமடைந்திருக்கின்றனர். 

-- பெர்னாமா