பொது

நாட்டில் இன்று ஏழு புதிய கொவிட்-19 சம்பவங்கள்

08/08/2020 07:41 PM

புத்ராஜெயா8 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நாட்டில் இன்று, சனிக்கிழமை ஏழு புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. 

அதில், ஆறு வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களை உட்படுத்தியது என்றும் எஞ்சிய ஒன்று, உள்நாட்டில் பரவியது என்றும் சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். 

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களை உட்படுத்திய ஆறு சம்பவங்களில், மூன்று சம்பவங்கள் மலேசியப் பிரஜைகள் தொடர்புடையது என்றும் மேலும் மூன்று சம்பவங்கள் மலேசியப் பிரஜை அல்லாதோர் சம்பந்தப்படுத்தியது என்றும் டாக்டர் நோர் ஹிஷாம் இன்று, வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். 

உள்நாட்டில் பரவிய ஒரு சம்பவம், நெகிரி செம்பிலானில் வேலை இடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரிய வந்திருக்கிறது. 

இந்தோனேசியாவில் வேலை செய்து வந்த இந்நபர், கடந்த மே மாதம் 7-ஆம் தேதி மலேசியாவிற்கு திரும்பி இருக்கிறார். 

இவருக்கு அறிகுறி எதுவும் இல்லாததோடு, துவாங்கு ஜாஃபர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

இன்று கொவிட்-19 நோய்க் காரணமாக எந்தவொரு மரணச் சம்பவமும் பதிவு செய்யப்படாத நிலையில், மரண எண்ணிக்கை 125ஆக நீடிக்கிறது. 

அதோடு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருவர் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், ஒருவருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது. 

இதனிடையே, சிவகங்கை நோய்த் தொற்றினால், கெடா, பெர்லிஸ் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 4,198 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

அதில், 43 பேருக்கு இந்நோய்க் கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், 3,235 இந்நோய்த் தொற்று இல்லை என்றும் 920 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருப்பதாகவும் நோர் ஹிஷாம் தெரிவித்தார். 

-- பெர்னாமா