பொது

சிலிம் இடைத் தேர்தலில் கூடுதல் அம்சங்களுடன் அமலாக்க வழிகாட்டி

06/08/2020 05:41 PM

கோலாலம்பூர், 06 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பகாங், சினி இடைத் தேர்தலின்போது பயன்படுத்தப் பட்ட தேர்தல் அமலாக்க வழிகாட்டி, சில கூடுதல் மேம்பாட்டு அம்சங்களுடன் சிலிம் இடைத் தேர்தலிலும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கிறது. 

இந்தப் பரிந்துரையை துல்லியமாக ஆராய்ந்தப் பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

தேர்தல் பொறுப்பாண்மைக்குழு, எஸ்பிஆர் நிர்ணயித்திருக்கும் செயல்பாட்டு தர விதிமுறையான எஸ்.ஓ. பி-யைப் பின்பற்றி கட்சி நடவடிக்கை அறை மற்றும் சிறிய நடவடிக்கை அறை, இடைத்தேர்தல் நிறைவடையும் வரையில் திறக்கப்படுவதும் அப்புதிய வழிகாட்டியில் இடம் பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

கோலாலம்பூர், நாடாளுமன்றக் கட்டிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவான பி.கே.பி தொடர்பான சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 

இதனிடையே, பிரச்சாரம் மற்றும் சொற்பொழிவுகள், உள்ளரங்க பகுதிகள் அல்லது வேலியிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

இது, உடல் உஷ்ணத்தைப் பதிவு செய்வதையும் கண்காணிப்பு நடவடிக்கையையும் எளிமையாக்கும் என்று அவர் தெளிவுபடுத்தினார். 

சம்பந்தப்பட்ட பகுதியின் பரப்பளவின் அடிப்படையில் தொடுகை இடைவெளியைக் கடைப்பிடித்து ஒரே சமயத்தில் 250க்கும் குறைவான வருகையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது. 

அதேவேளையில், நடப்பு சூழ்நிலையின் அடிப்படையிலான தேர்தல் வழிகாட்டி குறித்து போட்டியிடும் கட்சி பிரதிநிதிகளிடம் தேர்தல் பொறுப்பாண்மைக் குழு பேச்சுகள் நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

-- பெர்னாமா