பொது

உள்நாட்டு சுற்றுலா துறை வளர்ச்சிக் கண்டிருக்கிறது

27/07/2020 06:18 PM

கோலாலம்பூர், 27 ஜூலை (பெர்னாமா) -- கடந்த ஜூன் 10-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வரும் மீட்பு நிலை நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவின் போது உள்நாட்டு சுற்றுலா துறை மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது அத்துறை நல்ல வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற மற்றும் உல்லாச தங்குமிடங்கள், குறிப்பாக தீவுகள், கடற்கரைகள், மலைப்பகுதிகள் என்று இயற்கை அழகை சார்ந்திருக்கும் பகுதிகளில் பொது மக்களின் வருகை அதிகரித்திருப்பதாக சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நென்சி சுக்ரி தெரிவித்திருக்கிறார். 

இவ்வாண்டு ஜூலை தொடங்கி, செப்டம்பர் மாதம் வரையிலான, ஏர் ஆசியா விமான நிறுவனத்தின் உள்நாட்டு பயணங்களுக்கான சிறப்பு கழிவு விற்பனையில், ஜூன் 10 முதல் ஜூன் 28-ஆம் தேதி வரையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் விமான பயண டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருப்பதாக டத்தோ ஶ்ரீ நென்சி கூறினார். 

முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரத்தில் தங்கு இடங்களின் விழுக்காடு அதிகரித்திருக்கின்றன. பெரும் அளவில் அதிகரிப்பு இல்லை என்றாலும், அது நல்ல வளர்ச்சியை காட்டுகின்றது என்று தெரிவித்தார்.

கொவிட்-19 பெருந்தொற்று தாக்கத்திற்குப் பின்னர், உள்நாட்டு சுற்றுலா குறித்த பிரச்சாரங்களை அரசாங்கமும் சுற்றுலாத் துறையைச் சார்ந்தவர்களும் ஊக்குவிப்பது  தொடர்பில்,மக்களவை கேள்வி நேரத்தில், டத்தோ ஶ்ரீ நென்சி இவ்வாறு பதிலளித்தார். 

அதேவேளையில், உள்நாட்டு விமான பயண டிக்கெட், தங்கும் விடுதி, மற்றும் சுற்றுலாத் தலங்களில் வழங்கப்படும் சிறப்பு கழிவுகள் என்று, உள்ளூர் சுற்றுலாத் துறைச் சார்ந்தவர்களின் முயற்சியால், இந்த வளர்ச்சியினை காண முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 

-- பெர்னாமா