உலகம்

சில உலக நாடுகளின் நிலவரம்

16/07/2020 07:04 PM

பெய்ஜிங், 16 ஜூலை (பெர்னாமா) -- கொவிட்-19 நோய்த் தொற்றினால் வீழ்ச்சியடைந்திருந்த, சீனாவின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி அடையத் தொடங்கி இருக்கிறது. 

இப்பெருந்தொற்றினால், சீனாவில் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைக்குப் பின்னர், அந்நாட்டில் தொழிற்சாலைகளும் கடைகளும் மீண்டும் திறக்கப்பட்டன. 

அதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பொருளாதாரம் எதிர்ப்பாராத விதமாக 3.2 விழுக்காடு வளர்ச்சி கண்டிருக்கிறது. 

போர்ட் எலிசபெத்

தென் ஆப்பிரிக்காவில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் பற்றாக்குறையினால், கொவிட்-19 நோய்க்கு ஆளான நூற்றுக் கணக்கானோர், சிகிச்சை அளிக்கப்படாமல் திரும்ப அனுப்பப்பட்டனர். 

இந்நோய்க் கண்டவர்களில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கும் சூழ்நிலை போர்ட் எலிசபெத் மருத்துவமனை ஊழியர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். 

மருத்துவச் சிகிச்சை பெறாமல் மரணமடைந்த நூற்றுக் கணக்கானோர் நகரத்தில் உள்ள மயானத்தில் புதைக்கப்படுகின்றனர். 

உலகம் முழுவதும் இதுவரை, ஒரு கோடியே 37 லட்சத்து 7,069 பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்றியிருப்பது உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. 

இந்நோயினால் இதுவரை, ஐந்து லட்சத்து 87,145 பேர் உயிரிழந்திருப்பதோடு, 81 லட்சத்து 66,748 பேர் குணமடைந்திருக்கின்றனர். 

பெய்ஜிங்

இந்திய- சீன எல்லைப் பகுதியில், இவ்விரு நாடுகளின் ராணுவத்திற்கிடையே அண்மையில் ஏற்பட்ட கைகலப்பைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை நான்காம் கட்ட ராணுவ பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 

இதில், இவ்விரு நாடுகளும் சில நேர்மறையான முடிவுகளை எடுத்திருப்பதாகவும், இரு தரப்பும் ஏகமனதாக ஒரு முடிவுக்கு வருவதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளை இந்தியா மேற்கொள்ளும் என்று தாம் நம்புவதாக சீன வெளியுறவு அமைச்சரின் பேச்சாளர் ஹுவா சுன்யிங் புதன்கிழமை தெரிவித்தார். 

வடக்கு லுவு

இந்தோனேசியாவின், வடக்கு லுவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடரப்பட்டு வருகிறது. 

அந்நாட்டில், தெற்கு சுலாவெசியில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை, புதன்கிழமை 21-ஆக அதிகரித்திருப்பதோடு, இருவர் காணாமல் போயிருக்கின்றனர். 

-- பெர்னாமா