பொது

சினி இடைத்தேர்தல்: நாளை முன்கூட்டியே வாக்களிப்பு

29/06/2020 03:19 PM

சினி, 29 ஜூன் (பெர்னாமா) -- பஹாங், N.23 சினி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலை முன்னிட்டு, நாளை அங்குள்ள போலீஸ் நிலையத்தின் தகவல் அறையில், 18 போலிஸ் உறுப்பினர்கள் முன்கூட்டியே வாக்களிக்கவிருக்கின்றனர். 

இங்கு நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பொறுப்பாண்மைக் குழு எஸ்பிஆர் வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி தொடங்கி நண்பகல் 12 மணி வரையில் முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த முன்கூட்டிய வாக்களிப்பு நடவடிக்கையின் போது அனைவரும் கொவிட்-19 நோய்த்தொற்றைத் தடுக்கும் வழிகாட்டல்களை அவசியம் பின்பற்ற வேண்டும். 

குறிப்பாக தொடுகை இடைவெளியைக் கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல், கைகளுக்கு கிருமிநாசினி திரவத்தை பயன்படுத்துதல், கையுறை அணிதல், உடல் உஷ்ணப் பரிசோதனை மேற்கொள்தல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

புதிய வாக்களிப்பு நடைமுறையை எஸ்பிஆரின் முகநூலிலோ அல்லது தேர்தல் கழகத்தின் மூலமாகவோ காணலாம். 

வேட்பாளரின் முகவர்கள் மற்றும் எஸ்பிஆரால் நியமிக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பாளர்கள் முன்னிலையில், இந்த முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெறும். 

முன்கூட்டிய வாக்களிப்பிற்கு பயன்படுத்தப்படும் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் சினி போலீஸ் நிலையத்தில் வைக்கப்படும். 

பின்னர் சினி இடைத்தேர்தல் நாளான ஜூலை 4-ஆம் தேதியன்று பலோ ஹினாய் போலீஸ் நிலையத்தின் தகவல் அறையில் வாக்குகள் கணக்கிடப்படும். 

-- பெர்னாமா