விளையாட்டு

விளையாட்டாளர்களும், பயிற்சியாளர்களும் தேசிய விளையாட்டு மன்றத்திற்கு விரைவில் அழைக்கப்படுவர்

27/06/2020 10:02 PM

புக்கிட் ஜாலில், 27 ஜூன் (பெர்னாமா) -- அனைத்து 539 விளையாட்டாளர்களும் 142 பயிற்சியாளர்களும் தேசிய விளையாட்டு மன்ற பயிற்சி மையத்திற்கு மீண்டும் விரைவில் அழைக்கப்படவிருக்கின்றனர். 

ரோட் டூ லண்டன் (Road To London) திட்டம் (RTT), போடியம் திட்டம் மற்றும் தேசிய இளம் விளையாட்டாளர் திட்டம் ஆகியவற்றை உட்படுத்திய விளையாட்டாளர்கள், ஜூலை 5-ஆம் தேதி முதல் மீண்டும் பயிற்சியைத் தொடங்க அனுமதிக்கப்படுவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரிசால் மெரிகான் நைனா இதனை அறிவித்திருக்கிறார். 

எனினும், இந்த அனுமதி, தேசிய பாதுகாப்பு மன்றமும் சுகாதார அமைச்சும் நிர்ணயித்திருக்கும் செயல்பாட்டு தர விதிமுறையான எஸ்.ஓ.பி.-க்கு உட்பட்டிருக்கும் என்று தேசிய விளையாட்டு மன்றத்தின் தலைமை இயக்குநர் டத்தோ அஹ்மாட் ஷாபாவி தெரிவித்தார். 

இந்த அனுமதியைத் தொடர்ந்து, புக்கிட் ஜாலில் எம்.எஸ்.என்., புக்கிட் கியாரா மலேசிய பூப்பந்துக் கழகம், கெராமாட் எம்.எஸ்.என். மற்றும் லங்காவி எம்எ.ஸ்.என். ஆகியவற்றைச் சேர்ந்த அனைத்து விளையாட்டாளர்கள் தங்களின் விளையாட்டு மையங்களுக்கு திரும்பவிருக்கின்றனர். 

இதில், RTT மற்றும் ,போடியமின் 135 பாரா விளையாட்டாளர்களும் 31 பயிற்சியாளர்களும் உட்படுத்தப்பட்டிருப்பதோடு அவர்கள் கம்போங் பண்டான் பாராலிம்பிக் மையத்தில் தங்களைப் பதிந்துக் கொள்ளவிருக்கின்றனர். 

தேசிய விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியைத் தொடங்க தளவாடங்கள் மற்றும் பயிற்சி இடங்கள், விளையாட்டு தொடர்புடைய அறிவியல் மற்றும் மருத்துவ சேவைகள் முழுமையாக இருப்பதை உறுதி செய்ய எம்.எஸ்.என் மற்றும் ஐ.எஸ்.என் ஆகியவை எஸ்.ஓ.பியை கடைப்பிடிக்கும். 

-- பெர்னாமா