பொது

செப்டம்பர் 30 வரை மின்சார துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படாது

20/06/2020 06:01 PM

கோலாலம்பூர், 20 ஜூன் (பெர்னாமா) --தீபகற்ப மலேசியாவில் குடியிருப்பு பிரிவின் கீழ், அனைத்து மின்சார பயனீட்டாளர்களுக்கும் உதவும் நோக்கில், பரிவுமிக்க கூடுதல் மின்சார உதவித் திட்டத்திற்கு பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின்  ஒப்புதல் அளித்துள்ளார்.

இக்கூடுதல் உதவித் திட்டமானது, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு PKP காலக் கட்டத்தில் அதிகரித்திருந்த, மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று, எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் டத்தோ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.

இக்கூடுதல் உதவித் திட்டத்தின் மூலமாக சுமார் 70 லட்சத்து 66 ஆயிரம் பயனீட்டாளர்கள் பலனடைவர்.

ஒரு மாதத்திற்கு 300 கிலோவாட்ஸ்-க்கும் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் பயனீட்டாளர்கள் ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மாதங்களில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தியிருந்தாலும், இந்த கூடுதல் உதவித் திட்டம், ஜூலை மாத மின்சார கட்டண கணக்கில் சேர்த்து கொள்ளப்படும் என்று டாக்டர் ஷம்சுல் விவரித்தார். 

அதேவேளையில், 300 கிலோவாட்ஸ்-க்கும் அதிகமாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் ஜூலை மாத கணக்கிலிருந்து அதற்கு முந்தைய  3 மாதங்களையும் சேர்த்து  231 ரிங்கிட் கட்டண தள்ளுபடி செய்யப்படும்.

KWIE எனப்படும் மின்சார தொழில் நிதி, நிதியமைச்சு, தேசிய மின்சார வாரியம் டிஎன்பி (TNB) ஆகியவை இணைந்து இந்தப் பரிவுமிக்க கூடுதல் மின்சார உதவித் திட்டத்திற்கு நிதியுதவி அளித்துள்ளதாக  அவர் மேலும் கூறினார்.  

இப்பரிவுமிக்க கூடுதல் மின்சார உதவித் திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக 94 கோடியே 20 லட்சம் ரிங்கிட்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மின்சார பயனீட்டாளர்களுக்கு  220 கோடி ரிங்கிட் கழிவு வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இதனிடையே, இவ்வாண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மின்சார துண்டிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதற்கு டி.என்.பி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இன்று சனிக்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் ஷம்சுல் குறிப்பிட்டார்.

-பெர்னாமா