சிறப்புச் செய்தி

ஆலயங்களில் எஸ்.ஒ.பியைக் கடைப்பிடிக்கத் தவறினால், அனுமதி மீட்பு

27/05/2020 08:03 PM

கோலாலம்பூர், 27 மே (பெர்னாமா) -- கொவிட்19 பெருந்தொற்றின் தாக்கத்தால், மூடப்பட்ட வழிப்பாட்டு தலங்கள் கட்டம் கட்டமாக திறக்கப்படுகின்ற நிலையில், நாட்டில் பச்சை மண்டலப் பகுதிகளைச் சார்ந்த 84 கோவில்கள் வாரத்தில் 2 நாட்களுக்கு திறக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 

நிபந்தனைக்கு உட்பட்ட  இந்த நடமாட்ட கட்டுப்பாட்டு காலத்தில், நிர்ணையிக்கப்பட்ட  செயல்பாட்டு தர விதிமுறைகளான எஸ்.ஒ.பியை, ஆலய தரப்பினர் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.  

ஒருவேளை, விதிமுறைகளை மீறினால், ஆலயங்களின் அனுமதி உடனடியாக மீட்டுக் கொள்ளப் படுவதாக எச்சரிக்கையும் விடுக்கப் பட்டிருப்பதால், ஆலய நிர்வாகத்தினர் இந்நடைமுறையில் மிகவும் கவனமாக செயல்பட போவதாக, பெர்னாமா தமிழ்ச் செய்தியிடம் தெரிவித்துள்ளனர். 

அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர், நாடு முழுவதும் பச்சை மண்டல பகுதிகளில் 84 ஆலயங்கள் திறக்கப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு அதன் பட்டியல் மலேசிய இந்து சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. 

அதோடு, ஆலயங்கள் திறப்பு மற்றும் இறப்பு சடங்குகள் ஆகிவற்றுக்கான எஸ்.ஓ.பியையும் ஒருமைப்பாட்டு அமைச்சு,  அனுப்பி இருப்பதால் அதனைக் கடைபிடிப்பதில் ஆலயத் தரப்பினர் அலட்சிய போக்குடன் இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் 18-ஆம் தேதி தொடங்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவைத் தொடர்ந்து நிர்வாகமும் பக்தர்களுமின்றி ஆலயங்கள் மூடப்பட்ட நிலையில் இருக்கின்றன. 

இந்த புதிய நடைமுறைகள் மக்களின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்திருப்பதால், முகக் கவசம் அணிவது, தொடுகை இடைவெளி போன்றவற்றில் ஆலயத் தலைவர்கள் முக்கியத்தவம் செலுத்தவிருப்பதாக சிலர் தெரிவித்தனர். 

வெறிச்சோடி கிடைக்கும் இந்த ஆலயங்கள் ஜூன் 10-ஆம் தேதி தொடங்கி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், வாரத்தில் இரு நாட்களில் அதிகபட்சம் 30 பேர் மட்டுமே இருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இக்கால கட்டத்தில், ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் , கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதால், ஆலய நிர்வாகமும் பொதுமக்களும் எஸ்.ஓ.பியை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் சிலர் கேட்டுக் கொண்டனர். 

அதேவேளையில், ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களில் திருமண வைபவங்கள் ஜூலை 31-ஆம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டிருப்பதும் அறிவிப்பாகி இருக்கிறது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 6 மணியிலிருந்து, இரவு 9 மணிக்கு வரை அந்த 84 ஆலயங்களும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. 

-- பெர்னாமா