பொது

உணவு பொருட்களின் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது

27/05/2020 07:34 PM

கோலாலம்பூர், 27 மே (பெர்னாமா) -- நாடு, கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்க்கொண்டிருக்கும் இக்காலக் கட்டதில், உணவு மற்றும் அடிப்படை தேவைகளுக்கான பொருட்களின் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது. 

இந்நோய்த் தொற்று தொடரும் நிலை ஏற்பட்டாலும், அதனை எதிர்கொள்வதற்கான சாத்தியத்தையும், உணவுப் பொருட்களின் கையிருப்பு தொடர்ந்து நிலைத்திருக்கும் என்ற உத்தரவாதத்தையும் வழங்க, உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சு விவசாயம் மற்றும் உணவு தொழிற்துறை அமைச்சு, மற்றும் அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சுகளுடன் இணைந்து தயார் நிலையில் உள்ளதாக, அதன் அமைச்சர் டத்தோ அலெக்ஸ்சண்டர் நந்தா லிங்கி கூறுகிறார். 

புதன்கிழமை, சரவாக் செரியானில் உள்ள ஒரு சந்தையைப் பார்வையிட்ட பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 

போதுமான விநியோகத்தை உறுதிச் செய்வதற்கான அனைத்து வியூகங்களையும் அமைச்சு கொண்டிருப்பதால், பெருநாள் காலங்களில் கூட மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. 

சரவாவில் நோன்புப் பெருநாள் மற்றும் காவாய் பெருநாளை முன்னிட்டு, பெருநாள் கால அதிகபட்ச விலை இரண்டாம் திட்டத்தின் கீழ், கூடுதலாக 11 பொருட்கள் இணைக்கப்பட்டு, நோன்பு பெருநாளை முன்னிட்டு 20 பொருட்களும், காவாய் பெருநாளை முன்னிட்டு 22 பொருட்களும் விலைக் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விலைக்கட்டுப்பாடு, மே 22ஆம் தேதி தொடங்கி ஜூன் 3ஆம் தேதி வரையில் 13 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. 

-- பெர்னாமா