பொது

உதவிநிதி கிடைக்காத டாக்சி ஓட்டுநர்கள் ஓட்டுநர் அட்டையைப் புதுப்பிக்கப் பரிந்துரை

23/05/2020 05:37 PM

கோலாலம்பூர், 23 மே (பெர்னாமா) -- 2020-ஆம் ஆண்டுக்கான முதல் கட்ட பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், 600 ரிங்கிட் நிதி உதவிக் கிடைக்காத டாக்சி ஓட்டுநர்கள், தரைப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் APAD-டிடம், தங்களின் ஓட்டுநர் அட்டையை புதுப்பிக்குமாறு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. 

அவர்கள் தேவையான ஆவணங்களை வரும் ஜூலை முதலாம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று, போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்திருக்கிறார். 

பல்வேறு காரணங்களால், அதிகமானோர் இன்னும் இந்த நிதி உதவியைப் பெறாமல் இருப்பது தெரிய வந்திருப்பதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். 

இதில், ஓட்டுநர் அட்டை காலவதியானாதாலும், 2013 ஆம் ஆண்டு, பிரிவு நான்கு, SPAD சுற்றறிக்கையை மீறியதாலும், சுமார் 30,000 டாக்சி ஓட்டுநர்களுக்கு இந்த நிதி உதவி கிடைக்கவில்லை.

எனவே, ஓட்டுநர் அட்டை காலாவதியான 30,000 டாக்சி ஓட்டுநர்களும், இந்த அனுகூலங்களைப் பயன்படுத்திக் கொள்ள, ஜூலை முதலாம் தேதிக்குள் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து தங்களின் அட்டையைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். 

அதைத் தொடர்ந்து, ஓட்டுநர்கள் இந்த 600 ரிங்கிட் நிதியைப் பெறுவதற்கான உதவியை APAD மேற்கொள்ளும் என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறினார். 

-- பெர்னாமா