பொது

மாநிலம் கடந்து செல்வதில் மலாக்காவே முதலிடம்

22/05/2020 07:25 PM

புத்ராஜெயா, 22 மே (பெர்னாமா) -- நோன்புப் பெருநாள் காலங்களில் மாநிலங்கள் கடந்து செல்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்காத நிலையிலும் மலாக்கா மாநிலத்திலிருந்தே அதிகமானோர் மாநிலம் கடந்து செல்வதற்கு முயற்சித்துள்ளனர். 

அம்மாநிலத்திலிருந்து மட்டும் இதுவரை 886 வாகனங்கள் மற்ற மாநிலங்களுக்குக் கடந்து செல்ல முயற்சித்துள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார். 

அதேபோல பேரா மாநிலத்தில் 362 வாகனங்களும் பினாங்கில் 284 வாகனங்களும் மாநிலம் கடந்து செல்ல முயற்சித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதனிடையே, சொந்த ஊர்களுக்குத் திரும்புவதாகக் காரணம் கூறி நேற்று மட்டும் மாநிலம் கடந்து செல்ல முயற்சித்த 2,539 வாகனங்களை அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம் திரும்ப அனுப்பியுள்ளது. 

மற்றொரு நிலவரத்தில் வெளி மாநிலங்களில் தனித்தனியாக வேலை செய்யும் கணவர் - மனைவி தம்பதியர் வாரத்திற்கு ஒருமுறை சந்தித்து கொள்வதற்கு வழங்கப்பட்ட தளர்வை அரசாங்கம் மீட்டுக் கொள்வதாகவும் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார். 

-- பெர்னாமா