அரசாங்கம் அறிவித்துள்ள பரிவுமிக்க பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தில் இந்திய தொழில் முனைவர்கள் பயனடைவார்கள்

09/04/2020 08:05 PM

கோலாலம்பூர், 09 ஏப்ரல் (பெர்னாமா) -- நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால், முடங்கிப் போயிருக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில், கடந்த 6-ஆம் தேதி அரசாங்கம் அறிவித்துள்ள பரிவுமிக்க பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தில், 1,000 கோடி ரிங்கிட் மதிப்பிலான கூடுதல் நிதி ஒதுக்கீடு வரவேற்கத் தக்கதாகும். 

இந்த உதவித் திட்டத்தின் மூலமாக குறுந்தொழில், சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களின், பொருளாதார மந்த நிலையை ஓரளவு சீர் செய்ய முடியும் என்று, கோலாலம்பூர் - புத்ராஜெயா இந்திய வர்த்தக சம்மேளனத்தின், மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ சரவணன் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

வியாபாரத்தில் ஈடுப்பட்டிருப்பவர்கள், அவர்களின் வியாபார பிரிவை அறிந்து கொண்டால் அதற்கு ஏற்ப அவர்கள் விண்ணப்பங்களை இலகுவாகப் பூர்த்திச் செய்து சமர்ப்பிக்கலாம் என்று டத்தோ சரவணன் கூறினார்.

பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் அறிவித்திருக்கும் பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம், இந்தியர்கள் ஈடுப்பட்டிருக்கும் தொழில்துறைகள் மற்றும் வர்த்தகங்கள் தற்காலிக மீட்சி காணும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

கட்டுப்பாட்டு உத்தரவு முடிவுக்கு வந்தாலும், கொவிட்-19 நோயின் தாக்கத்தால் அனைத்து வர்த்தகங்களும் குறைந்தது ஓராண்டிற்கு பாதிப்பை எதிர்நோக்கக்கூடும்.

இதனிடையே, அந்நிய தொழிலாளர்களின் லெவி புதுப்பிப்பு கட்டணத்திற்கு அரசாங்கம் அளித்திருக்கும் விலக்கு, 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் பெரிய வணிக நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்று கோலாலம்பூர் - சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழிலியல் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஆர்.ராமநாதன் தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி வணிக லைசன்சை புதுப்பிக்க வசூலிக்கப்படும் கட்டணத்தை அகற்றியிருப்பது, மற்றும் இவ்வாண்டிற்கான வருமான வரியிலிருந்து விலக்கு அளித்திருப்பதும் வர்த்தகர்களுக்கு மன நிறைவை ஏற்படுத்தியுள்ளதாக ஓர் அறிக்கையின் வாயிலாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

-- பெர்னாமா