சிறப்புச் செய்தி

மக்கள் நலப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில் இந்தியர்கள் ஈடுபட்டிருக்கும் குறுந்தொழில் துறைக்கும் முக்கியத்தும் கொடுக்கப்பட வேண்டும்

01/04/2020 08:25 PM

கோலாலம்பூர், 01 ஏப்ரல் (பெர்னாமா) -- கொவிட்-19 நோயின் தாக்கத்தை குறைக்க, மக்கள் நலப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கும் வேளையில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக வழங்கப்பட்டிருக்கும் ஒதுக்கீட்டில், சில அம்சங்களைக் கருத்தில் கொள்ளுமாறு, மைக்கி எனப்படும் மலேசிய இந்திய தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் கேட்டுக் கொண்டிருக்கிறது. 

இதன் வழி, வியாபாரத் துறையில் இருக்கும் இந்தியர்களில், 90 விழுக்காட்டினர் குறுந்தொழிலில் ஈடுப்பட்டிருப்பதால், இத்துறைக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை, நிதி அமைச்சிடம் முன் வைக்கப்பட்டிருப்பதாக, அதன் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் ஏ.டி.குமரராஜா தெரிவித்திருக்கிறார். 

மலேசியாவில் இருக்கும் ஒன்பது லட்சத்து ஏழாயிரத்து 65 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில், ஆறு லட்சத்து 93 ஆயிரத்து 670 அல்லது 76.5 விழுக்காடு குறுந்தொழில் நிறுவனங்களாகும்.

தற்போது வழங்கப்பட்டிருக்கும் ஒதுக்கீடு, சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு திருப்தியளிக்காத நிலையில், இந்த ஒதுக்கீடு போதுமானதாக இருக்காது என்பதால், குறுந்தொழிலில் ஈடுபடுவர்களுக்கு உதவும் வகையில் கூடுதல் தொகை ஒதுக்கப்பட வேண்டும் என்று டாக்டர் குமரராஜா தெரிவித்தார். 

-- பெர்னாமா