சிறப்புச் செய்தி

தாமான் ஶ்ரீ மூடா ஶ்ரீ மஹா மாரியம்மன் கோவில் நிர்வாகம் வசதி குறைந்தவர்களுக்கு உதவிக் கரம் நீட்டி வருகிறது

29/03/2020 08:14 PM

ஷா ஆலம், 29 மார்ச் [பெர்னாமா] -- கொவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியால், நாட்டில் பல தரப்பினர் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். 

சிலாங்கூர், ஷா ஆலம், செக்‌ஷன்  25, தாமான் ஶ்ரீ மூடாவில் உள்ள ஶ்ரீ மஹா மாரியம்மன் கோவில் நிர்வாகம், வசதி குறைந்தவர்களுக்கு உதவிக் கரம் நீட்டி வருகின்றது.

நாட்டு மக்களை மிகவும் அச்சுறுத்தி வரும் கொவிட்-19 நோய்க் காரணமாக, நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு இவ்வாண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இதனால், பலர் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

இதன் காரணத்தினால், பொருளாதாரச் சுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்கும் நோக்கத்தில், தாமான் ஶ்ரீ மூடாவில் உள்ள வசதி குறைந்தவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களை கோயில் நிர்வாகம் வழங்கி வருவதாக ஶ்ரீ மஹா மாரியம்மன் கோவில் நிர்வாகத் தலைவர் ஜி. குமரேசன் தெரிவித்தார்.

இம்மாதம் 25-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் இந்த உதவி மூலம், தினசரி வருமானம் பெறுபவர்கள் பெற்றோரை இழந்தவர்கள் என்று 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற்றிருக்கின்றன.

-பெர்னாமா