பொது

நாட்டு அரசியல் அரங்கின் சதுரங்க ஆட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை

24/02/2020 03:10 PM

கோலாலம்பூர், 24 பிப்ரவரி [பெர்னாமா] -- நாட்டு அரசியல் அரங்கில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கும் அரசியல் கட்சிகளின் சதுரங்க ஆட்டம் இன்னும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவில்லை.

அது இன்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றுக்கு மத்தியில், துணைப் பிரதமர் டத்தோஶ்ரீவான் அசிசா வான் இஸ்மையிலும்  அவரின் கணவரும் கெஅடிலான் தலைவருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் மாட்சிமைத் தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாயாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவை இஸ்தானா நெகாராவில் சந்திக்க விருப்பதாகக் கூறப்படுகிறது.

அதோடு,  நம்பிக்கைக் கூட்டணியில் இருக்கும் ஜசெகவும் கோலாலம்பூரில் உள்ள தலைமையகத்தில், இன்றைய அரசியல் சூழ்நிலைத் தொடர்பில் அவசரக் கூட்டத்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிலாங்கூரிலும் கோலாலம்பூரிலும் தீபகற்ப மற்றும் சரவாவைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பு சந்திப்புகளை நடத்தியிருந்தன. 

அக்கட்சிகளின் சிறப்புக் கூட்டங்கள், நாட்டின் அரசியல் அரங்கில் பல்வேறு ஊகங்களுக்கு உயிரூட்டியிருக்கின்றன.

கூட்டத்திற்காக மூடப்பட்ட கதவுகளுக்கு வெளியே தகவல்களைச் சேகரிக்க நாட்டின் தகவல் சாதன பணியாளர்கள் நள்ளிரவு வரை காத்திருத்திருந்துச் செய்திகளை வெளியிட்டு வந்தனர்.

ஆனால், அவற்றின் நோக்கத்தை எந்த ஒரு தலைவரும் இதுவரையில் வெளியிடவில்லை.

-- பெர்னாமா