சிறப்புச் செய்தி

பாடலாசிரியர் பயிலரங்கத்தின் மூலம் ஐந்து பாடல் ஆசிரியர்கள் உருவாகினர் - பொன் கோகிலம்

19/02/2020 08:31 PM

கோலாலம்பூர், 19 பிப்ரவரி (பெர்னாமா) -- நாட்டில் அதிகமான எழுத்தாளர்களும் கவிஞர்களும் தலையெடுக்கும் போது அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் முகவும் அவசியமாக இருக்கின்றது. அந்த அவசியத்தை உணர்ந்து, இளம் தலைமுறை படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அவர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது. 

அதில் அண்மையில் அவர்கள் ஏற்று நடத்திய பாடலாசிரியர் பயிலரங்கத்தின் மூலம் ஐந்து 5 பாடல் ஆசிரியர்களை உருவாகி இருப்பதுடன், தமிழகத்தில் அவர்களுக்கான அங்கிகாரத்தையும் தாங்கள் பெற்றுத் தந்திருப்பதாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உதவி தலைவர் பொன். கோகிலம் கூறுகின்றார். 

மலேசியாவில் வெளியிடப்படும் பல தரமான பாடல்கள், காலங்கள் கடந்தும் மக்களால் கேட்கப்பட வேண்டும் என்பதுடன், அத்தகையப் பாடல்கள் எழுதப்படும்போது, சரியான வரிகள் கையாளப்பட வேண்டும். அதற்கான சொல்லாடல் மற்றும் இலக்கண விதிகளை வகுக்கும் கவிஞர்களையும் பாடல் ஆசிரியர்களை உருவாக்கும் எண்ணத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இந்த முதல் முயற்சியை மிகச் சிறப்பாக அரங்கேற்றி முடித்ததாக பொன். கோகிலம் தெரிவித்தார். 

கவிதை வேறு பாடல் எழுதுவது வேறு என்ற தெளிவை இந்த பட்டறை வழங்கிய அதேநேரத்தில் அனுபவத்தால் முடங்கிய சிந்தனைகளை தூசு தட்டி மீண்டும் அவர்களுக்கு ஒரு புதிய பாதையை வகுக்கும் எண்ணத்திலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக பொன். கோகிலம் குறிப்பிடுகிறார். இதுபோன்ற பட்டறைகள் வழி, பாடலுக்கென்று கவிதை எழுதும் சரியான நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள முடியும். 

அங்கிருந்து திறன் மிக்கவர்களுக்கு முறையான அங்கீகாரத்தை பெற்றுத் தருவதும் எழுத்தாளர் சங்கத்தின் கடமைகளில் ஒன்று என்று, கோலாலம்பூர், விஸ்மா பெர்னாமாவில், பெர்னாமா தமிழ்ச்செய்திக்கு வழங்கிய நேர்காணலில் பொன். கோகிலம் தெரிவித்தார். 

முதல் நிலையில் வெற்றி பெற்ற அந்த ஐந்து பாடலாசிரியர்களின் பாடல்களை எழுத்தாளர் சங்கம் இவ்வாண்டு வெளியீடு செய்யவிருப்பதாகவும் பொன் கோகிலம் கூறினார். இதன் வழி வளர்ந்து வரும் இளம் பாடலாசிரியர்களை மட்டுமின்றி, சிறந்த இசைக் கலைஞர்களையும் ஊக்குவிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  அதோடு, நல்ல தொடக்கம் இருக்கும் போது, அதற்கான தொடர்ச்சி இருப்பது அவசியம் என்பதால், கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அந்த முயற்சி இந்த 2020 ஆண்டிலும் சாத்தியப்படும் முயற்சியில் எழுத்தாளர் சங்கம் களமிறங்கி இருப்பதாக அவர் கூறினார். 

-- பெர்னாமா