சிறப்புச் செய்தி

பெண்கள் உரிமைகளுக்காக கலைஞர்களின் போர் 2020 - தவரூபிணி சுப்ரமணியம்

18/02/2020 08:03 PM

கோலாலம்பூர், 18 பிப்ரவரி (பெர்னாமா) -- பெண்களுக்குத் தேவையான தன்முனைப்பான தகவல்களையும் தூண்டுகோலையும் பேச்சுகளின் மூலம் மட்டுமே, அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதல்ல. 

வாழ்வியல் கலையும் படைப்பும் சார்ந்த ஓவியக் கலையின் மூலமும், பெண்களின் உரிமைகளையும் அவர்களுக்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும் என்று கூறுகின்றார் ART BATTLE.MY நிறுவனத்தின் நிறுவனர் தவரூபிணி சுப்ரமணியம். 

விரைவில் கொண்டாடப்படவிருக்கும்  உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு, பெண்கள் உரிமைகளுக்கான கலைஞர்களின் போர் எனும் கருப்பொருளில் கோலாலம்பூரில் ஆறாவது முறையாக ஓவிய கண்காட்சியுடன் நிகழ்ச்சி ஒன்றை தவரூபிணி ஏற்பாடு செய்திருக்கின்றார். 

இந்த ஓவிய நிகழ்ச்சியில் மொத்தம் 12 கலைஞர்கள் பங்கேற்று பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அவர்களுக்கான உரிமைகள், அவர்களின் பங்களிப்புகள் போன்றவற்றை பொது மக்களுக்கு எடுத்துணர்த்தவிருப்பாதாகவும் தவரூபிணி தெரிவித்தார்.  அந்த ஓவியக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகும் ஓவியங்கள் இன்றைய நடைமுறை வாழ்வியலை குறித்து பேசும் என்றும் அவர் கூறுகிறார். 

நம்மை அறியாமலேயே, சமூக வலைத்தளங்களின் ஆதிக்கத்தால், அதிக நேரத்தை அதில் செலவுச் செய்கிறோம். அதில் ஒரு 20 நிமிடத்தை ஒதுக்கி, இந்த ஓவியக் கலை குறித்த ஆர்வத்தையும் தெளிவையும் பெற்றுக்கொள்ளும் போது பின்னாளில் அது கலை சார்ந்தவர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பையும் ஏற்படுத்தி தருவதாக தவரூபிணி குறிப்பிட்டார். 

பெண்களின் எண்ணங்களை அழகிய வண்ணங்களின் மூலம் வெளிப்படுத்த, ஆண்களாலும் முடியும் என்பதை மெய்பிக்கும் வகையில், உள்ளூரைச் சேர்ந்த ஆண் ஓவியக் கலைஞர்களும் இதில் பங்கேற்று மக்களுக்கு சிறந்த தூண்டுகோலை வழங்கவிருப்பதாகவும் அவர் கூறுனார்.

வரும் 22-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, புடுராயா பஸ் நிலையத்திற்கு பின்னால் இருக்கும்  ஜி.எம்.பி.பி (GMBB) பேரங்காடியில் இந்த நிகழ்ச்சி நடைபெறவிருப்பாதால் இளம் பெண்கள், தனித்து வாழும் தாய்மார்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இதில் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்.  கோலாலம்பூர், விஸ்மா பெர்னாமாவில், பெர்னாமா தமிழ்ச் செய்திக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின்போது தவரூபிணி இந்த தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார். 

-- பெர்னாமா