உலகம்

கொரோனா தொற்று நோய் அச்சுறுத்தல்: அனைத்துலக சுகாதார நிறுவனம் அவசரக்கால பிரகடனம்

01/02/2020 12:27 PM

ஜெனிவா, 30 ஜனவரி -- கொரோனா தொற்று நோயை, அனைத்துலக சுகாதார அவசர காலமாக, உலக சுகாதார நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை பிரகடனம் செய்திருக்கிறது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐநாவின் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகத்தில், இதன் தொடர்பில் அவசர கால செயற்குழுக் கூட்டம் நடந்தது.

அதன் பின்னர், அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் தெட்ரோஸ் அடானோம், இந்த அனைத்துலக சுகாதார அவசர காலத்தை அறிவித்திருக்கின்றார்.

சுகாதார முறை பலவீனமாக இருக்கும் மற்றும் அதை எதிர்கொள்ள தயார்நிலையில் இல்லாத நாடுகளில் இந்த கொரோனா நோய்க் கிருமி பரவும் சாத்தியம் இருப்பது மிகவும் வருத்தமளிப்பதாக, டாக்டர் தெட்ரோஸ் தெரிவித்தார்.

இந்த அவசரகால பிரகடனத்திற்கு முக்கிய காரணம் சீனாவில் ஏற்பட்டிருக்கும் நிலை அல்ல.

மாறாக, இதர நாடுகளில் நிகழும் சூழ்நிலையே காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

உலக சுகாதார நிறுவனத்தின் அண்மைய தகவல்கள்படி, சீனாவில், மாலை 6 மணி வரையில் 9,692 கொரோனா சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

உலகம் முழுமையிலும் அதன் எண்ணிக்கை 9,822-டாக அதிகரித்திருந்தது.

இந்நோய்க்கு, இதுவரையில் 213 பேர் மரணமடைந்திருக்கின்றனர்.

அவர்கள் அனைவரும் சீனாவில் வசிப்பவர்கள்.

சீனாவைத் தவிர்த்து, இதுவரையில், இதர நாடுகளில் இந்நோயினால் யாரும் மரணமடையவில்லை என்பதை உறுதிப்படுத்தியடாக்டர் தெட்ரோஸ், இந்நோய் தொடர்ந்து பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் அனைவரும் ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா