Ad Banner
Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

பேராக் மாநில அளவிலான செந்தமிழ் விழா; ஆதரவு அளிக்கும் அரசாங்கம்

28/06/2026 08:51 PM

சித்தியவான், ஜூன் 28 (பெர்னாமா) -- பேராக் மாநில அளவிலான தமிழ்ப்பள்ளி மற்றும் இடைநிலைப்ள்ளி மாணவர்களுக்கான செந்தமிழ் விழா சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இந்த செந்தமிழ் விழாவிற்கு மாநிலம் மற்றும் மத்திய அரசாங்கம் நிதி வழங்கி,
தமிழ்மொழி மற்றும தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு ஆதரவு அளித்து வருவதாக பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

12 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துக் கொண்ட இவ்விழாவிற்கு மாநில அரசாங்கம் சார்பில் 24 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டதாக டத்தோ அ. சிவநேசன் கூறினார்.

"வரும் ஜூலை மாதம் தைப்பிங்கில் தேசிய நிலையில் நடைபெறவிருக்கும் செந்தமிழ் விழாவிற்கு மத்திய அரசாங்கம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் வழங்கியுள்ள நிலையில் 50 ஆயிரம் ரிங்கிட் பேரா மாநில அரசு வழங்கியுள்ளது,'' என்றார் அவர்.

பேராக், சித்தியவானில் உள்ள மகா கணேச வித்தியாசாலை தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டப் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் இத்தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

கடந்த ஜூன் 13ஆம் தேதி பேராக் மாநிலத்தின் 12 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெற்ற வளர்தமிழ் விழா போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற மாணவர்கள் இந்தச் செந்தமிழ் விழாவில் பங்கேற்கத் தகுதி பெற்றதாக மஞ்சோங் மாவட்டத் தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத் தலைவர் சுப்ரமணியம் ரங்கசாமி தெரிவித்தார்.

இதில் ஒட்டுமொத்த போட்டியாளர்களில் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த லாருட் மாத்தாங், செலாமா மாவட்டம் முதல் நிலையிலும், இரண்டாவது நிலையில் கோலகங்சார் மற்றும் மூன்றாவது நிலையில் மஞ்சோங் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

அதோடு, இடை நிலைப்பள்ளிகளில் ஒட்டுமொத்த வெற்றியாளராக மஞ்சோங் மாவட்டம் முதல் நிலையிலும், லாருட் மாத்தாங். செலாமா மாவட்டம் இரண்டாவது நிலையிலும், மூன்றாவது நிலையில் கிந்தா செலத்தான் மாவட்டமும் வெற்றிப் பெற்றன.

இதனிடையே, போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வென்ற மாணவர்கள் தங்களது மகிழ்ச்சியை பெர்னாமா செய்திகளிடம் பகிர்ந்து கொண்டனர்.

தேசிய அளவிலான செந்தமிழ் விழாவிற்கு தயாராகி வருவதாகவும் மாணவர்கள் கூறினர்.
- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)