Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

11 வேட்பாளர்களை களமிறக்கும் பாஸ் கட்சி

26/06/2026 03:33 PM

மூவார், 26 ஜூன் (பெர்னாமா) -- வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள 16-வது ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிட, பாஸ் கட்சி 11 வேட்பாளர்களை களமிறக்குகின்றது.

போட்டியிடும் பெரும்பாலான வேட்பாளர்கள் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்களாகவும், பல துறைகளில் அனுபவம் கொண்டவர்களாகவும் உள்ளதாக
அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சம்சுரி மொக்தார் கூறினார்.

''ஆம், தேர்தலில் போட்டியிட விரும்பும் எந்த அரசியல் கட்சியும் பல்வேறு அம்சங்களை நிச்சயமாகக் கருத்தில் கொள்ளும். அவர்கள் ஐந்து அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன் இருந்த சூழ்நிலையுடன் ஒப்பிடாமல், தற்போதைய நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுப்பார்கள். நாங்களும் சில காரணங்களைப் பரிசீலித்தே இந்த முடிவை எடுத்துள்ளோம். இதனால் எந்தவித எதிர்மறையான செய்தியும் வெளிப்படுவதாக நான் கருதவில்லை,'' என்றார் அவர்.

நேற்றிரவு, மூவாரில் உள்ள லாமான் முவாஃபாகாட் வளாகத்தில், நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தலில், பெரிகாத்தான் நேஷனலைப் பிரதிநிதிக்கும் பாஸ் கட்சியின் வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் அஹ்மாட் சம்சுரி அதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் 16 வேட்பாளர்களை, பெர்சத்து கட்சியும் அறிவித்திருக்கின்றது.

மூவார், தாமான் பாகோ ஜெயாவில் அமைந்துள்ள, பாகோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தில், கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு மற்றும் பொதுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில், முன்னாள் ஜோகூர் மந்திரி புசார் டத்தோ டாக்டர் சஹ்ருடின் ஜமால், புக்கிட் கெப்போங், தொகுதியில் போட்டியிடவிருக்கிறார்.

அதேவேளையில், மக்களவைத் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ முஹமட் ரஷிட் ஹஸ்னோ செங்காராங் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)