Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

அரசியல் சர்ச்சைகளுடன் அரச குடும்பத்தை தொடர்புப்படுத்த வேண்டாம் - பிரதமர் நினைவூட்டு

24/06/2026 06:24 PM

அலோர் காஜா, 24 ஜூன் (பெர்னாமா) -- தேர்தலை எதிர்கொள்ளும் இக்காலக்கட்டத்தில், அரசியல் சர்ச்சைகளுடன் அரச குடும்பத்தை தொடர்புப்படுத்த வேண்டாம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைத்து தரப்பினரையும் நினைவூட்டினார்.

அரசியல்வாதிகளிடையே எழும் எந்தவொரு கருத்து வேறுபாடுகளையும் அல்லது கூற்றுகளையும், அரச குடும்பத்தை உட்படுத்தாமல், முதிர்ச்சியுடன் கையாள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த திங்கட்கிழமை ஜோகூரில் நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு விழாவில் அமானா கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு உரையாற்றியபோது, ​​அரச குடும்பத்தை கேலி செய்ததாக சில தரப்பினர் குற்றம் சாட்டியிருப்பது தொடர்பில் கருத்துரைத்த பிரதமர் அவ்வாறு கூறினார்.

மற்றொரு நிலவரத்தில், அனைத்துலக நிர்வகிப்பு மேம்பாட்டு கழகம், IMD வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான உலகப் போட்டியாற்றல் தரவரிசையில் மலேசியாவின் அடைவுநிலையை வெற்றிகரமாக மேம்படுத்தியதற்காக, நாட்டின் பொது சேவை துறை ஊழியர்களின் ஆற்றலை பிரதமர் பாராட்டினார்.

மலேசியாவின் இந்த முன்னேற்றமான தரவரிசைக்கு, அண்மையில் அந்நாட்டிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது துர்க்மெனிஸ்தான் அதிபர் செர்டார் பெர்டிமுஹமெடோவ்வும் பாராட்டியதாக அன்வார் குறிப்பிட்டார்.

மலேசியாவின் வெற்றி பெர்டிமுஹமெடோவ்வின் கவனத்தையும் ஈர்த்து, தங்களின் அடைவுநிலையை மேம்படுத்த மலேசியப் பொது சேவை துறையுடன் கலந்துரையாடல் நடத்துவதற்கு தங்கள் நாட்டின் குழுவை அனுப்ப அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

''இந்த மூன்றரை ஆண்டுகளில் நமது (மலேசியாவின்) அடைவுநிலை பிரதமர் அன்வார் என்பதால் அல்ல, இல்லை... (மாறாக) இந்த அமைப்பாலும் (பொது சேவை துறை நிர்வாகம்), குழுவில் உள்ள நண்பர்களாலும்... பொது சேவை துறை ஊழியர்களாலும் தான். அதிபர் (செர்தார்) உலகப் போட்டித்திறன் குறியீட்டைக் குறிப்பிட்டார், நீங்கள் மிகவும் சிறந்த அடைவுநிலையை காட்டியுள்ளீர்கள். நான் (அதிபர் செர்தாருக்கு) நன்றி கூறினேன், ஆனால் இது பொது சேவை துறை குழுவினரால்தான் சாத்தியமானது என்று எனக்குத் தெரியும்... ஏனெனில் இந்தத் ஆற்றலும் சேவையும் எனது முயற்சிகளினால் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்தக் குழுவின் கூட்டு முயற்சியாகும்,'' என்றார் அவர்.

இன்று, மலாக்கா, சிம்பாங் அம்பாட்டில் உள்ள பொதுப்பணித் துறையின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சிறப்பு மையம், CREaTE-டில் நடைபெற்ற, தெற்கு மண்டல பொது சேவை துறை ஊழியர்களுடனான பிரதமர் மற்றும் அரசாங்கத் தலைமைச் செயலாளரின் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அன்வார் இவ்வாறு கூறினார்.

மலேசியா, IMD 2026 உலகப் போட்டித்திறன் தரவரிசையில், கடந்தாண்டு 23-வது இடத்தில் இருந்து எட்டு இடங்கள் முன்னேறி 15-வது இடத்தைப் பிடித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)